இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியை வலுப்படுத்தும் நோக்கிலும் அணியில் அங்கம் வகிக்கும் வீரர்களுக்கு உற்சாகம் வழங்கும் வகையிலும் இலங்கை கிரிகெட் தெரிவுக்குழுவில் முன்னாள் நட்சத்திர வீரர்களான அரவிந்த டி சில்வா மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

மேலும் கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அரவிந்த டி சில்வா மஹேல ஜயவர்தனவுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆசியக் கிண்ணத் தொடரில் பங்கேற்ற இலங்கை அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை மாத்திரம் வெற்றி கொண்டதோடு பங்களாதேஷ் உள்ளிட்ட ஏனைய அணிகளிடம் தொடர் தோல்வியை தழுவியிருந்தது. 

மேலும் மாலிங்க அணியில் இடம்பெற்றிருந்த போதும் காயம் காரணமாக களமிறங்கவில்லை. இதன்காரணமாக திரிமான்ன போன்ற முக்கிய வீரர்களுக்கு விளையாடும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்ததோடு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடம் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து மாலிங்க தனது தலைமைத்துவ பதவியை நேற்று முன்தினம் இராஜினாமா செய்தார். 

இவ்வாறு இலங்கை கிரிக்கெட் அணிக்குள் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பிலுள்ள விளையாட்டு அமைச்சில் இன்று இடம்பெற்றது.

இதில் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால, இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் புதிய தலைவரான அரவிந்த டி சில்வா, உறுப்பினர்களான குமார் சங்கக்கார, களுவித்தாரண ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த அரவிந்த டி சில்வா,

ஆசியக் கிண்ணத் தொடருக்கு விருந்தினராக எனக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபையால் அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றது. 

இதனையடுத்து நான் அங்கு சென்றிருந்தேன். இலங்கை கிரிக்கெட் அணி தொடர் தோல்வியை சந்தித்திருந்த போது வீரர்களுடன் கதைத்து ஊக்கமளிக்குமாறு என்னிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதனையடுத்து வீரர்கள் இருக்கும் இடத்துக்கு நான் சென்றேன். கிரிக்கெட் வீரர்கள் தலையை கீழே போட்டுக்கொண்டு மனத்தைரியம் இழந்து காணப்பட்டனர். வரலாற்றில் இலங்கை அணியை நான் இவ்வாறு கண்டதில்லை. இவ்வாறான ஒரு நிலையில் இலங்கை அணிக்கு நாம் உற்சாகத்தை வழங்க வேண்டும். 

உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி வீரர்களுக்கு உற்சாகம் வழங்கவும் அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் என்னிடம்  அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனது வேலைப்பளுவுக்கு மத்தியில் நாட்டின் நன்மை கருதி இதனை ஏற்றுக்கொண்டேன். அணி வலுவிழந்து காணப்படும் இந்த சந்தர்ப்பத்தில் நாம் கட்டாயம் கைகொடுக்க வேண்டும். இதன்பின்னர் சங்கக்காரவிடம் தனியாக கதைத்தேன். அவரும் சரியான வேலைப்பளுவுக்கு மத்தியில் உதவுவதாக வாக்குறுதி வழங்கினார்.

 சங்கக்கார, மஹேல ஆகியோர் இலங்கை அணியை ஒரு முக்கிய இடத்துக்கு கொண்டுச் சென்றுள்ளனர். அவர்கள் விட்டுச் சென்றதை தொடர்ந்து அணியை வழிநடத்தி செல்வதற்கு சந்திமால், திரிமான்ன ஆகியோரை தெரிவு செய்தோம்.

ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகளால் அதை முன்கொண்டு செல்ல முடியாமல் இருந்தது.

எனினும் பின்னடைவைக் கண்டுள்ள இலங்கை அணிக்கு மஹேல ஜயவர்தனவும் தற்போது உதவ வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் தமது துறையில் பூரணத்துவம் பெறலாம்.

மேலும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் மூன்றாவது வீரராக களமிறங்கும் வீரர்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர். 

இந்தியாவில் விராட் கோலி போன்று இலங்கை அணிக்கு முக்கிய ஒரு வீரர் வேண்டும். அதற்காக நாம் திரிமான்னவை தெரிவு செய்துள்ளோம். மேலும் சந்திமால் தொடர்ந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவார். 

உலகக் கிண்ணத்தில் பங்கேற்க உள்ள இலங்கை அணிக்கு நாம் அனைவரும் ஆதரவு வழங்குவதோடு வீரர்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்றார்.

இங்கு கருத்து தெரிவித்த குமார் சங்கக்கார,

இருபது-20 போட்டியை பொறுத்தவரையில் களத்தில் வீரர்களின் மனநிலை மற்றும் தலைவரின் தீர்மானம் என்பவற்றிலேயே அணியின் வெற்றி தங்கியுள்ளது. அணியின் வெற்றிக்கு திறமையான வீரர்கள் தேவை. மேலும் அணியில் திறமையான வீரர்கள் இல்லாதபட்சத்தில் அணித் தலைவர் மனமுடையக்கூடிய சூழலும் உள்ளது. எனவே தைரியம் இழந்து காணப்படும் இலங்கை அணிக்கு இலங்கையர்கள் அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார்.

இங்கு கருத்து தெரிவித்த கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால,

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அவசரமாக புதிய தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. மேலும் லசித் மாலிங்க அவராகவே அணித் தலைவர் பதவியிலிருந்து விலகினார். யாரும் நிர்ப்பந்திக்கவில்லை. இந்நிலையில் பல குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன என்றார்.