இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சர்வக் கட்சிக் குழுவில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க சபாநாயகர் கருஜயசூரியவின் தல‍ைமையில் இலங்கையின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இந்தயாவுக்கு விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையிலான இந்தக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, நிமால் சிறிபால டிசில்வா, ரிஷாத் பதியூதீன், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித்த ஹேரத் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும் இந்த விஜயத்தில் கலந்து கொள்ளுமாறு கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினரும் தினேஷ் குணவர்த்தனவுக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும் இந்த அழைப்பினை தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சித்  தல‍ைமைப் பதவி தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் இலங்கை குறித்து பிழையான தோற்றப்பாட்டை இந்தியாவுக்கு ஏற்படுத்த தாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் எனவும் சுட்டிக்காட்டி இந்த அழைப்பினை நிராகரித்துள்ளார்.