தென் ஆப்பிரிக்க நாட்டின் தலைநகரான கேப் டவுனில் உள்ள ஆயுத கிடங்கொன்று வெடித்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். 

கேப் டவுனில் சாமர்செட் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆயுதக் கிடங்கில் பீரங்கிகள், கனரக ஆயுதங்கள், கையேறி குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன என்று நிறுவனத்தின் வலைத்தளம் கூறுகின்றது.

அத்துடன் இந்த ஆயுதக் கிடங்கின் மூலமாகவே பெரும்பாலும் நேட்டோ நாடுகளுக்கும் ஆசியா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கும் வெடி மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றது.

இந் நிலையில் நேற்று இந்த ஆயுதக் கிடங்கு திடீரென வெடித்துச் சிதறியுள்ளதனால் எட்டுப் பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீ விபத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டிருக்கும் தீயணைப்பு படையினரும் மீட்புப் படையினரும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை எனவும் இது சம்பந்தமான விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட சொத்து சேதம் இதுவரை உறுதியாக வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.