(ஆர்.யசி)

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னைய ஆணையாளர்கள் இலங்கை தொடர்பில் கையாண்ட விதத்திலும் பார்க்க தற்போதைய புதிய ஆணையாளர் இலங்கை தொடர்பில் எம்மிடம் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக அமைந்துள்ளதென அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். 

இப்போது இருக்கும் நிலைமையில் இலங்கையை சர்வதேச தரப்பு இலக்கு வைக்கவில்லை என நம்பக்கூடிய வகையில் நிலைமைகள் அமைந்துள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

கடந்தகால அழுத்தங்களில் இருந்து நாம் விடுபட்டுள்ளதுடன் நல்லிணக்கத்தை உருவாக்கும் நெடுந்தூர பயணத்தை ஆரம்பித்துள்ளோம். எனினும் நல்லிணக்கத்தை தக்கவைக்க இன்னும் நீண்டதூரம் பயணிக்கவேண்டிய தேவை எமக்கு உள்ளது. 

எனினும் நிலைமைகள் தொடர்ந்தும் இவ்வாறு இருக்காது. எமக்கு கொடுக்கப்பட்டுள்ள காலத்தினுள் நல்லிணக்கத்தை பலப்படுத்துவதன் மூலமே தப்பிக்க முடியும். இப்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை சரியாக கையாள்வதன் மூலமாகவே இந்த ஒத்துழைப்புகளை தக்கவைக்கவும்  முடியும்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இப்போது இலங்கை முகம்கொடுக்கும் நிலைமைகள் மிகவும் சாதகமான ஒன்றாக அமைந்துள்ளது.

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னைய ஆணையாளர்கள் இலங்கை தொடர்பில் கையாண்ட விதத்திலும் பார்க்க தற்போதைய புதிய ஆணையாளர் இலங்கை தொடர்பில் எம்மிடம் தெரிவித்திருக்கும் கருத்துககள் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக அமைந்துள்ளது. 

அதேபோல் இந்த கருத்துகள் இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்தில் பரவி எம்மீதான ஆதரவை அதிகரித்துள்ளது. ஆகவே இப்போது இருக்கும் நிலைமையில் இலங்கையை சர்வதேச தரப்பு இலக்கு வைக்கவில்லை என நம்பக்கூடிய வகையில் நிலைமைகள் அமைந்துள்ளது. 

எவ்வாறு இருப்பினும் இன்றும் எமக்கு சவால்கள் உள்ளது. வென்றெடுத்த நல்லிணக்கத்தை தக்கவைக்க இன்னும் போராடவேண்டிய நிலைமை உள்ளது. வடக்கில் தமிழ் மக்கள் நல்ல விதமான ஒத்துழைப்புகளை எமக்கு வழங்குகின்றனர். அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து எம்முடன் பயணிக்க ஆரம்பித்துள்ளனர். நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் அனைத்து இன மக்களுடனம் பயணிக்க வேண்டும். நாம் அனைவரும் இலங்கையர் என்ற உணர்வுடன் செயற்பட வேண்டும். அந்த பயணத்தை முன்னெடுக்க பிரதான இரண்டு கட்சிகளும் தயாராகியுள்ளது. அவ்வறு இருக்கையில் எந்த அழுத்தங்களையும் எம்மால் வெற்றிகொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.