தெற்காசியாவையும் தென்கிழக்காசியாவையும் சேர்ந்த 7 நாடுகளை உள்ளடக்கிய பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி அமைப்பின் (  Bay of Bengal Initiative for Multi - Sectoral Technical and economic Cooperation - BIMSTEC _   பிம்ஸ்டேக்   ) உச்சிமகாநாடு கடந்தவாரம் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்றது.இருநாள் மகாநாட்டின் இறுதியில் அந்த உப பிராந்திய அமைப்பின் தலைமைத்துவம் முறைப்படி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.பிம்ஸடேக்கின் அடுத்த உச்சிமகாநாடு இலங்கையில் நடைபெறும்.அதற்கான ஆண்டு, மாதம் மற்றும் திகதிகள் நிர்ணயிக்கப்படவில்லை.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நிரந்தர தலைமையகத்தைக் கொண்டிருக்கும் பிம்ஸ்டேக்கின் தலைமைத்துவப் பொறுப்பு உறுப்பு நாடுகளின் பெயரகளின் ஆங்கில அகரவரிசை ஒழுங்கில் தீர்மானிக்கப்படுவது நடைமுறையாக இருந்துவருமிறது.1997 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட பிம்ஸ்டேக் இதுவரையில் அதாவது இரு தசாப்த காலகட்டத்தில் நான்கு உச்சிமகாநாடுகளையே நடத்தியிருக்கிறது.1997 ஜூன் 6 தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் கூடிய பங்களாதேஷ், இந்தியா, இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பாக BIST - EC என்ற பெயரிலேயே இதை உருவாக்கினார்கள்.பின்னர் மியன்மார் 1998 ஆம் ஆண்டிலும் நேபாளம், பூட்டான் ஆகியவை 2004 ஆம் ஆண்டிலும் இணைந்துகொண்டதையடுத்தே பிம்ஸ்டேக் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பாங்கொக்கில் 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது உச்சிமகாநாட்டுக்குப் பிறகு இரண்டாவது உச்சிமகாநாடு 2008 நவம்பரில் இந்தியத் தலைநகர் புதுடில்லியிலும் மூன்றாவது உச்சிமகாநாடு 2014 மார்ச்சில் மியன்மாரின் தலைநகர் நை பிடோவிலும் நான்காவது உச்சிமகாநாடு 2018 ஆகஸ்டில் காத்மாண்டுவிலும் நடந்தேறின.

காத்மாண்டு உச்சிமகாநாட்டையடுத்து குறிப்பாக அதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருக்கும் கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் இந்த பிம்ஸ்டேக் அமைப்பு மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக இருந்துவரும் சார்க் அமைப்பை ( பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம்) மேவிச்சென்றுவிடுமா என்ற கேள்வியை அரசியல் அவதானிகள் எழுப்பியிருக்கிறார்கள்.சார்க் அமைப்பில் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு, பூட்டான்,பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.இவற்றில் இந்தியா,பங்களாதேஷ், இலங்கை,பூட்டான் மற்றும் நேபாளம் ஆகியவை பிம்ஸடேக்கிலும் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தீராத தகராறுகள் காரணமாக சார்க் அமைப்பின் செயற்பாடுகள் பல வருடங்களாக பெரும் பின்னைடைவுக்கு உள்ளாகியிருக்கும் சூழ்நிலையில் பிம்ஸ்டேக் நாடுகளுடனான பல்துறைத் தொடர்புகளை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் முனைப்பை இந்தியப் பிரதமர் கடந்தவாரம் காத்மாண்டுவில் வெளிக்காட்டியிருக்கிறார்.சார்க் அமைப்பின் உச்சிமகாநாடு இரு வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறவேண்டும்.ஆனால் அந்த அமைப்பு  அதன் 33 வருடகால வரலாற்றில் இதுவரையில் 18 உச்சிமகாநாடுகளையே நடத்தியிருக்கிறது. இறுதியாக உச்சிமகாநாடு 2014 நவம்பரில் காத்மாண்டுவில் நடைபெற்றது.அடுத்த உச்சிமகாநாடு 2016 நவம்பரில் பாகிஸ்தானில் நடத்தப்பட்டிருக்கவேண்டும்.ஆனால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்ட முறுகல்நிலை காரணமாக திட்டமிட்டபடி அந்த உச்சிமகாநாட் நடத்தப்படாமல்  ரத்துச்செய்யப்பட்டது. 20 ஆவது சார்க் உச்சிமகாநாடு இந்த வருடம் இலங்கையில் நடத்தப்பட வேண்டியதே முறையாகும். ஆனால், அது தாமதப்படுத்தப்படுகிறது.பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுடனான உறவுகளைச் சீர்செய்துகொண்டு சார்க் உச்சிமகாநாட்டையும் நடத்துவதில் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார் என்றபோதிலும், நிலைவரங்களில் மேம்பாட்டைக்காண முடியவில்லை.

இத்தகையதொரு பின்புலத்திலே, பிம்ஸ்டேக்கின் 7 உறுப்பு நாடுகளிடையேயும் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான அவசியம் குறித்து நரேந்திரமோடி கடந்தவாரம் உச்சிமகாநாட்டில் கடுமையாக வலியுறுத்தியிருக்கிறார்.தொடர்புகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் என்றுவைரும்போது அவை வர்த்தகம், பொருளாதாரம், போக்குவரத்து, டிஜிட்டல் வலையமைப்புகள் மற்றும் நாடுகளின் மக்களுக்கிடையிலான உறவுகள் ஆகியவற்றையும் பிரதானமாக உள்ளடக்கியவையாக இருக்கவேண்டும் என்று அவர் அழுத்தமாக  குறிப்பிட்டிருக்கிறார்.

"அயல்நாடுகளே முதலில்.கிழக்கை நோக்கிய செயல் முனைப்பு" என்ற மோடி அரசாங்கத்தின் நோக்கிற்கு இசைவான முறையிலேயே அவரின் காத்மாண்டு உரை அமைந்திருந்ததாக பிராந்திய அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

பிம்ஸ்டேக் உறுப்புநாடுகள் உலக சனத்தொகையில் 22 சதவீதத்தைக்கொண்டிருக்கின்ற அதேவேளை அவற்றின் ஒருங்கிணைந்த நிகர உள்நாட்டு உற்பத்தி சுமார் 2.7 ரில்லியன் டொலர்களாகும்.தெற்காசியாவுக்கும் தென்கிழக்காசியாவுக்கும் இடையிலான ஒரு பாலமாக பிம்ஸ்டேக்கை புதுடில்லி நோக்குகின்ற அதேவேளை, ஏனைய உறுப்பு நாடுகள் இந்தியாவின் விரிந்துபரந்த சந்தையை  தங்களுக்கு அனுகூலமாக்கிக்கொள்ளக்கூடிய வாய்ப்பைக் கொண்டிருக்கின்றன. புதுடில்லிக்கும் இஸ்லாமாபாத்திற்கும் இடையிலான வேறுபாடுகளின் காரணமாக உகந்தமுறையில் செயற்படாமலிருக்கும் சார்க் அமைப்பை வழிக்குக் கொண்டுவருவதற்கும் நவீன பட்டுப்பாதை என்று வர்ணிக்கப்படுகின்ற மண்டலமும் பாதையும் ( Belt and Road Initiative ) என்ற பிரமாண்டமான திட்டத்தின் மூலமாக வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள நாடுகளில் ஊடுருவும் சீனாவின் செல்வாக்கை தடுப்பதற்கும் பிம்ஸ்ரெக்கைப் பாவிப்பதற்கு இந்தியா நாட்டம் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.நவீன பட்டுப்பாதையைக் கட்டியெழுப்புவதற்கான சீன ஜனாதிபதி சி ஜின்பிங் ஆர்வமிகு திட்டத்தில் பிம்ஸ்ரெக்கின் பெரும்பாலான உறுப்புநாடுகள் ஏற்கெனவே முறைப்படி சேர்ந்துகொண்டுள்ளன என்பதுடன் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு முதலீடுகளைப் பெருமளவில் செய்யும் சீனாவுடன் தங்களது அபிவிருத்தித் திட்டங்களை அந்த நாடுகள் நெருக்கமாகப் பிணைத்திருக்கின்றன.

சீனாவின்நவீன பட்டுப்பாதைத் திட்டத்துக்கு மாற்றீடாக ஒப்பேறக்கூடிய செயற்திட்டமொன்றை அயல்நாடுகளுக்கு முன்வைக்கவேண்டிய தேவையை இந்தியா விளங்கிக்கொண்டுள்ளது. ஆனால், சீனாவுடன் போட்டிபோட்டுக்கொண்டு அத்தகையதொரு திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய பொருளாதார வல்லமை இந்தியாவிடம் இருக்கின்றதா என்பது முக்கியமான ஒரு கேள்வி.பிம்ஸ்டேக்  நாடுகளுடன் வர்த்தகம் , பொருளாதாரம் உட்பட சகல துறைகளிலும் தொடர்புகளை மேம்படுத்துவதென்பது பிரமாண்டமான செலவு பிடிக்கிற விவகாரமாகும்.

இதுவரையில் நான்கு உச்சிமகாநாடுகளை மாத்திரமே நடத்தியிருக்கின்ற பிம்ஸ்டேக்கை உத்வேகப்படுத்துவதற்கான முனைப்பை இந்தியா பாகிஸ்தானுடனான அதன் உறவுகள் கடுமையாக கீழ்நோக்கிச் சென்றிருக்கும் ஒரு தருணத்தில் வெளிக்காட்டியிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கதாகும்.பாகிஸ்தானுக்கும் தனக்கும் இடையிலான தொடர்ச்சியான பதற்றநிலையினால் பாதிக்கப்படாத ஒரு உப பிராந்திய அமைப்பின் உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து பணியாற்றுவது சுலபமானது என்று புதுடில்லியில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் நினைக்கிறார்கள் போலும். ஆனால், நேபாளம் போன்ற பிம்ஸ்டேக்கின் முக்கிய உறுப்பு நாடுகள் சார்க் அமைப்பையும் பிம்ஸ்டேக்கையும் ஒனறுக்கொன்று உதவியாகச் செயற்படக்கூடியவை என்று நோக்குவதாகக் குறிப்பிட்டிருப்பதை இந்தியா முக்கியமாகக் கவனத்திற்கொள்ளவேண்டும் என்று அவதானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

எது எவ்வாறிருப்பினும் , காத்மாண்டு உச்சிமகாநாட்டில் கடந்தவாலம் இந்தியா முன்வைத்த தொடர்புகளை மேம்படுத்தும் ஆரவாரமான யோசனை முமுமையான திட்டமிடலையும் கணிசமான நிதியுதவியையும் வேண்டிநிற்கின்ற ஒன்றாகும்.அதைப் பொறுத்தவரை சீனாவுக்கு நிகரானதாக இந்தியா இல்லை என்பதே யதார்த்த நிலையாகும் என்பதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

(வீரகேசரி இணையத்தள வெளியுலக அரசியல் ஆய்வுத்தளம் )