இந்திய அணித் தலைவர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் அரங்களில் தலைவராக செயற்பட்டு 4 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றதுடன் டெஸ்ட் போட்டிகளில் 6 ஆயிரம் ஒட்டங்களையும் கடந்துள்ளார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.

இதில் சவுத்தாம்டனில் நேற்றைய தினம்  நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளதன் மூலம் தொடரை இங்கிலாந்து அணியிடம் 3:1 என்ற அடிப்படையில் பறிகொடுத்துள்ளது.

எனினும் இந்தப் போட்டியில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அணித் தலைவராக செயற்பாட்டு 4 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை புரிந்துள்ளார். 

அத்துடன்  சர்வதேச அரங்கில் இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இதன்படி விராட் கோலி 64 இன்னிங்ஸ்கள், பிரயன் லாரா 71 இன்னிங்ஸ்கள், ரிக்கி பாண்டிங் 75 இன்னிங்ஸ்கள், அயன் சாப்பல் 80 இன்னிங்ஸ்கள், ஆலன் பார்டர் 83 இன்னிங்ஸ்களை எதிர்கொண்டு 4 ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதரான இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி 544 ரன்களை எடுத்துள்ளார். ஒரு தொடரில் இங்கிலாந்து மண்ணில் இம் மைல்கல்லை எட்டிய முதல் ஆசிய அணித் தலைவர் என்ற பெருமை பெற்றார். ஒரு தொடரில் அந்நிய மண்ணில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய அணித் தலைவர் என்ற பெருமையையும் பெற்றார் கோலி. 

அத்துடன் இந்த நான்காவது தொடரின் முதல் இன்னிங்ஸில் கோலி டெஸ்ட் அரங்கில் 6 ஆயிரம் ஒட்டங்களை கடந்தமையும் குறிப்பிடத்தக்கது.