சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் ஹப்பில் அமைந்துள்ள சிங்கப்பூர் ஓ.சி.பி.சி. எரினா உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் 11 ஆவது ஆசிய கிண்ணப் போட்டிகளில் பி குழுவில் இடம்பெற்ற முன்னாள் ஆசிய வலைபந்தாட்ட சம்பியன் இலங்கை தனது இரண்டாவது போட்டியிலும் 100 கோல்களைக் கடந்து அபார வெற்றிபெற்றது.

தனது முதலாவது ஆட்டத்தில் சைனிஸ் தாய்ப்பே அணியை 137 க்கு 5 என்ற புள்ளிகள் அடிப்படையில் அமோக வெற்றிகொண்ட இலங்கை இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணியை 101 க்கு 29 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டது.

இப் போட்டியின் முதலாவது கால் மணி நேர ஆட்டப் பகுதியில் 25 க்கு 8 என்ற கோல்கள் கணக்கிலும் இரண்டாவது கால் மணி நேர ஆட்டப் பகுதியில்  33 க்கு 4 என்ற கோல்கள் கணக்கிலும் முன்னிலை வகித்த இலங்கை இடைவேளையின் போது 58 க்கு 12 என முன்னிலையில் இருந்தது.

இடைவேளையின் பின்னர் மூன்றாவது கால் மணி நேர ஆட்டப் பகுதியில் 20 க்கு 7 என முன்னிலை வகித்த இலங்கை கடைசி கால் மணி நேர ஆட்டப் பகுதியில் இந்திய அணியிடம் சிறு சவால எதிர்கொண்டது. எனினும் அப் பகுதியில் 22 க்கு 10 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்த இலங்கை இறுதியில் 101 க்கு 29 என்ற கோல்கள் அடிப்படையில் இலகுவாக வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் பி குழுவில் முதலாம் இடத்தைப் பெற்ற இலங்கை ஆசிய கிண்ணத்துக்கான இரண்டாவது சுற்றில் பிரதான அணிகளை சந்திக்கவுள்ளது.

நாளை ஓய்வு தினமாகும். இரண்டாவது சுற்றுப் போட்டிகள் செவ்வாயன்று ஆரம்பமாகும்.