மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையை உடனடியாக மீள ஆரம்பித்து தொழில் வாய்ப்பிளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான செயலணியில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்த அவர்,

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தோணிதாட்டமடு பகுதியில் மக்களின் 14 வீடுகளை இராணுவம் ஆக்கிரமித்து இராணுவ முகாம் அமைத்துள்ளது. எனவே இராணுவத்தை அகற்றி உரிய வீடுகளை மக்களிடம் மீள் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியை கேட்டுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தின் போது, மட்டு. மாவட்டத்தில் 67 க்கும் மேற்பட்ட மதுபானசாலைகள் உள்ளதனால் மதுபானசாலை பெருக்கத்தை குறைக்குமாறு வேண்டியதாகவும் இதற்கு ஜனாதிபதி தனது ஆட்சிக் காலத்தில் மதுபானசாலைகள் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அவ்வாறு இருந்தால் உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார் என்றார்.