கண்டி -கலஹா பிரதேச வைத்தியசாலையை உடனடியாக திறக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

கடந்த 28 ஆம் திகதி கலஹா பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தையொன்று உயிரிழந்ததையடுத்து அப் பகுதி மக்கள் வைத்தியாலையின் நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதனால், அதனால் அன்றைய தினம்  அப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து பிரதேசவாசிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வைத்தியசாலையின் உடமைகளுக்கும் பல சேதங்களுக்குள்ளானமையினால் வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது.

அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு சந்தேக நபர்கைள கலஹா பொலிஸார் நேற்றைய தினம் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந் நிலையில் இன்றைய தினம் கலஹா பிரதேச வாசிகள் குறித்த வைத்தியசாலையானது, எமக்கு மிகவும் அத்தியாவசியமானது என்றும் அதனை உடனடியாக பொது மக்களின் பாவனைக்கு திறக்குமாறு வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.