ஜனாதிபதி  சிறிசேனவிற்கும் எனக்கும் இடையில் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்பி திசநாயக்க இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் அவர் உறுதிசெய்துள்ளார்.

திசநாயக்க செய்திகளை கொண்டு வருகின்றார் அவ்வளவுதான் அதற்கப்பால் இந்த விடயம் நகரவில்லை என மகிந்த ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பெருந்துயரங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் மக்களை எதிரணியின் பக்கம் இணைப்பதே எங்களின் முக்கிய கவனமாக உள்ளது எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே நாங்கள் பாரிய பேரணியை புதன்கிழமை நடத்ததீர்மானித்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் விசேட நீதிமன்றங்கள் மூலம் பழிவாங்க முயல்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சிறிசேனவிற்கும் மகி;ந்த ராஜபக்சவிற்கும் இடையில் நெருக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் குறித்து பொது எதிரணியின் சிரேஸ்ட தலைவர்கள் கடும் சீற்றத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியை கடுமையாக விமர்சித்துள்ள பொது  எதிரணி தலைவர்கள் 16 பேரும் முதலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து விலகி  எங்களுடன் இணைந்து கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னரே ஏனைய விடயங்கள் குறித்து பேசலாம் என பசில் ராஜபக்ச உட்பட பொது எதிரணியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.