ஆசிய வலைபந்தாட்ட போட்டியில் இலங்கை அணி தனது முதாவது போட்டியில் சாதனைமிகு வெற்றியை ஈட்டியது.

சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் ஹப்பில் அமைந்துள்ள சிங்கப்பூர் ஓசிபிசி எரினா உள்ளக அரங்கில் இன்று ஆரம்பமான 11ஆவது எம் 1 ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளில் பி குழுவில் இடம்பெறும் முன்னாள் சம்பியன்  இலங்கை தனது முதலாவது போட்டியில் சாதனைமிகு வெற்றியை ஈட்டியது.

சைனீஸ் தாய்ப்பே அணிக்கு எதிராக நடைபெற்ற தனது ஆரம்பப் போட்டியில் கோல்மழை பொழிந்த இலங்கை 137 க்கு 5 என்ற கோல்கள் கணக்கில் அமோக வெற்றிபெற்றது.

இன்றைய  தினம் நடைபெற்ற போட்டிகளில் இலங்கை மாத்திரமே 100 கோல்களைக் கடந்தது. முதல் இரண்டு போட்டிகளில் 100 கோல்களை இலங்கை கடக்கும் என பயிற்றுநர் திலகா ஜினதாச கூறியதற்கு அமைய முதலாவது போட்டியில் இலங்கை 100 கோல்களைக் கடந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் முதல் கால் மணி நேர ஆட்ட முடிவில் இலங்கை 37 க்கு 2 எனவும் இரண்டாவது கால் மணி நேர ஆட்ட முடிவில் 37 க்கு 0 எனவும் முன்னிலையில் இருந்தது. இதன் பிரகாரம் இடைவேளையின்போது 64 க்கு 2 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை வகித்தது.

மூன்றாவது கால் மணி நேர ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய இலங்கை 32 க்கு 1 என முன்னிலை வகித்ததுடன் 100 கோல்களையும் கடந்திருந்தது.

கடைசி ஆட்ட நேர பகுதியிலும் சைனீஸ் தாய்ப்பேயை துவம்சம் செய்த இலங்கை 31 க்கு 2 என முன்னிலை வகித்து ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 137 க்கு 5 என்ற கோல்கள் கணக்கில் அமொக வெற்றிபெற்றது. இந்த வெற்றியானது இவ் வருடப் போட்டிகளில் இலங்கை அணிக்கு சம்பியானாவதற்கான வாய்ப்பு இருப்பதை எடுத்துக்காட்டியது.

11ஆவது ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளின் ஆரம்பப் போட்டியில் (சி குழு) புருணையை எதிர்த்தாடிய சிங்கப்பூர் 68 க்கு 19 என்ற கோல்கள் (19 க்கு 4, 20 க்கு 4, 15 க்கு 6, 14 க்கு 5) அடிப்படையில் வெற்றிபெற்றது.

ஏ குழுவுக்கான போட்டியில் ஜப்பானை 88 க்கு 13 என்ற கோல்கள் (22 க்கு 5, 26 க்கு 1, 23 க்கு 3, 17 க்கு 4) அடிப்படையில் மலேசியாவும் டி குழுவுக்கான போட்டியில் பிலிப்பைன்ஸை 71 க்கு 36 என்ற கோல்கள் (20 க்கு 10, 20 க்கு 9, 18 க்கு 6, 13 க்கு 11) கணக்கில் தாய்லாந்தும் வெற்றபெற்றன.

இலங்கை தனது இரண்டாவது போட்டியில் இந்தியாவை நாளை ஞாயிற்றுக்கிழமை எதிர்த்தாடவுள்ளது. (என்.வீ.ஏ.)