பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்தம் இரண்டு மாதங்களில் முடிவு தருவதற்காக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கள் மற்றும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்ற போதிலும், இம்முறை இந்த ஒப்பந்தத்தில் தொழிலாளர்களை வழைமைபோல் ஏமாற்ற முடியாது என மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும், சட்டதரணியுமான இளையதம்பி தம்பையா தெரிவித்தார்.

இன்று  ஹட்டன் சீ.எஸ்.சீ கேட்போர் கூடத்தில் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்களுக்கான கூட்டு ஒப்பந்தம் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் பல தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல்துறை பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உரிமைகள், சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்தம், மலையக மக்களின் எதிர்காலம் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். இதனடிப்படையில்  இன்று நடைபெறும் கருத்தரங்குக்கு இ.தொ.கா மற்றும் தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆகிய மூன்று தொழிற்சங்கத்துக்கும் அறிவித்த போதிலும் அச்சங்கங்களில் எவரும் கலந்து கொள்ளவில்லை.

இதேவேளை, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சங்கத்தின் தலைவரான இராமநாதன் என்பவருடன் கலந்துரையாடிய போது, தற்போது சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பான முடிவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தான் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி கிடைக்காததனால் கலந்து கொள்ள முடியாது என தனக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

இரண்டு மாதங்களில் எவ்வளவு சம்பள உயர்வு பெற்றுக்கொள்ள முடியும், எவ்வாறு இந்த கூட்டு ஒப்பந்தத்தை மாற்றியமைக்க முடியும், கூட்டு ஒப்பந்தத்தில் உரிமைகளை வென்றெடுப்பது தொடர்பாகவும் இன்று  இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டதோடு, பெருந்தோட்ட தொழில்துறையை பாதுகாப்பதற்கு மக்கள் இயக்கம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

இன்று தொழிலாளர்கள் மற்றும் பலர் எம்மிடம் இந்த கூட்டு ஒப்பந்த சம்பளத்தில் ரூபா அடிப்படையில் நீங்கள் கூறுகின்ற தொகை எவ்வளவு என குறிப்பாக 1000 ரூபா அல்லது 500 ரூபா என இலக்கங்களில் கேட்கின்றனர்.  

நாங்கள் தொழிற்சங்கம் என்ற வகையிலும், தற்போது கூட்டான கலந்துரையாடலில் ஈடுப்பட்டு இருப்பதன் காரணமாகவும் சம்பள உயர்வு எவ்வளவு என்பதை கூறுவது ஒரு உடன்பாடாக இருக்காது. ஆனால் ஒரு உயர்ந்தபட்ச சம்பள தொகையை தான் கேட்போம் என நான் இதன்போது தெரிவிக்கின்றேன் என்றார்.