(எம்.மனோசித்ரா)

பெற்றோலிய கூட்டுத்தாபன வேலைவாய்ப்பில் 10 சதவீதம் கூட்டுத்தாபனத்தில் தொழில் புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் என பெற்றோலிய  வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கூட்டுத்தாபனத்தில் தொழில்புரியும் ஊழியர்களின் பிள்ளைகளில் இவ்வாண்டு பல்கலைகழகம் செல்ல அனுமதி பெற்றுள்ளவர்களுக்கு புலமை பரிசில் வழங்கும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மேலும் நாட்டில் அரச தலைவர் முதற்கொண்டு அனைவரும் பொது மக்களின் வரிப்பணத்திலேயே கல்வி கற்றுள்ளோம். அமைச்சர் என்ற ரீதியில் எனது சம்பளமும் பொதுமக்கள் பணத்தில் இருந்தே தரப்படுகின்றது. 

எனவே நாட்டுக்கு இக் கடனை திருப்பி செலுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் காணப்படுகின்றது. இந்த பொறுப்பு எல்லோரிடத்திலும் காணப்படுமானால் எமது நாடு இலகுவாக அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.