(எம்.மனோசித்ரா)

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசாநாயக்க , பதுளை தமிழ் மகா வித்தியாலய அதிபரை முழந்தாழிடச் செய்தமை தொடர்பான வழக்கு ஒக்டோபர் மாதம் 11 திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.சட்டமா அதிபருக்கு பதிலாக ஆஜராகிய அரச தரப்பு சட்டதரணியின் விளக்கமளிப்பின் பின்னரே இவ்வாறு வழக்கு மீண்டும் ஒக்டோபர் மாதம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி மயூரி விஜயசூரிய தெரிவித்தார். 

வழக்கு விசாரணை நிறைவடைந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 

சட்டமா அதிபருக்கு பதிலாக தான் சமுகமளிப்பதாக அரச தரப்பு சிரேஷ்ட சட்டதரணி ஆஜராகியுள்ளதாக மன்றில் தெரிவித்தார். 

வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள 23 பேர் தொடர்பிலும் விளக்கமளிப்பதற்காக மீண்டும் இந்த வழக்கை எடுத்துக்கொள்ளுமாறு அரச தரப்பு சட்டதரணி நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். 

இதனடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி மீண்டும் இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயளாலர் மஹிந்த ஜயசிங்க, 

சம்பவம் தொடர்பில் ஊவா மாகாண சபை அரசாங்கதரப்பினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கையில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதனை நாம் முற்றாக எதிர்ப்பதோடு, அவ் அறிக்கையை குப்பையில் இடுமாறும் அவர்களுக்கு கூறுகின்றோம். 

இது திருடனின் தாயிடமிருந்து பெற்ற அறிக்கை போன்று இல்லாமல், நேரடியாக திருடனிடமிருந்தே பெற்ற அறிக்கையாகும். மேலும் அதிபரை அவர்களுடைய இல்லதிற்கு அழைத்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறவில்லை என குறிப்பிடுவது நியாயமற்றதாகும் என்றார். 

இது தொடர்பில் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட அதிபர் ஆர்.பவாணி,

ஊவா மாகாண முதலமைச்சர் சம்பத் தசாநாயக்கவினுடைய பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டு அவர் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

முழுமையான வழக்கு விசாரணைகளின் இறுதியில் யாருக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது என்பது முழு சமூகத்திற்கும் தெரியப்படுத்தப்படும்.

அத்தோடு மீண்டும் எமது நாட்டில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறாமல் தடுப்பதற்கு இது ஒரு சந்தர்ப்பமாகும் என்பதோடு தனக்கான நீதி கிடைக்கப்பெறும் என நம்புவதாக தெரிவித்தார்.