விவசாயி ஒருவரிடமிருந்து நெல் விநியோக சபையினால் கொள்வனவு செய்யும் நெல்லின் அளவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நெல் விநியோக சபைக்கு நெல்லை வழங்கும்போது விவசாயிகள் முன்னெடுக்க கூடிய பல வசதிகளை நாம் பெற்றுக் கொடுத்தோம். 

அதில் முதல் திட்டமாக விவசாயிகளுக்கு நெல்லை கொண்டு செல்வதற்கான பைகளை நாம் பெற்றுக் கொடுத்தோம். அடுத்ததாக விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்களின் பரிந்துரையின்றி நெல்லை விற்பனை செய்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்தோம்.

அதேபோன்று இன்று விவசாயிகளின் நலன் கருதி மற்றுமோர் சலுகையையும் பெற்றுக் கொடுத்துள்ளோம். 

அதற்கிணங்க நெல் விநியோக சபையூடாக விவசாயிகளிடமிருந்து இதுவரை 2 ஆயிரம் கிலோ கிராம் நெல்லே கொள்வனவு செய்யப்பட்டு வந்தது. 

இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் 2 ஆயிரம் கிலோ கிராமிலிருந்த  3 ஆயிரம் கிலோ கிராம் வரையான நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளோம் என்றார்.

இம்முறை சிறுபோக நெற் பயிர்ச்செய்கை மூலம் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்வனவின் போதே ஒரு விவசாயிடம் இருந்து பெறும் நெல்லின் அளவு 3 ஆயிரம் கிலோ கிராமாக அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.