பாதிக்கப்பட்ட எங்களுடைய தரப்பை ஒருதரப்பாக ஏற்றுக்கொள்ள சர்வதேசம் தயாராக இல்லை ஆனால் பாதிப்புக்களை ஏற்படுத்திய இலங்கை அரசாங்கத்தை ஒரு தரப்பாக சர்வதேசம் ஏற்கின்றது என வடமாகாண மகளீர்விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச்சபை மண்டபத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் அடுத்த மாதம் ஜ.நா மன்றத்தில் மனித உரிமைகள் தொடர்பான கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.

போர் முடிந்தும் ஒன்பது வருடங்கள் கடந்த நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான எந்த ஒரு வினைத்திறனான கடமையையும் அரசாங்கம் செய்யாமல் ஒரு பொறுப்பு கூறல்களை செய்ய முடியாதவர்களாக பல அமைப்புக்களை தோற்றுவிப்பது மட்டுமல்ல பலகோடி ரூபா செலவில் ஆணைக்குழுக்களை நியமித்தும் எந்தவித முன்னேற்றத்தையும் காட்டவில்லை.

வருடந்தோறும் நடந்து கொண்டிருக்கின்ற  ஜ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் இந்த வருடமும் எந்த ஒரு முன்னேற்றத்தையும் இந்த அரசு செய்து விடவில்லை என்று எடுத்துச் செல்லப்போகின்றோம்.

ஆனால், தாமதிக்கப்படுகின்ற நீதி எங்களுக்கு நீதியை சொல்லாமல் செல்கின்ற ஒரு செயற்திட்டமாக அரசு கொண்டு வந்திருக்கின்றது.

இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட எங்கள் உறவுகளை நாங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக கொடுத்துவிட்டு இன்று எங்களுடன் இந்த பிரச்சினை தீரப்போவதில்லை, தொடர்ந்தும் எங்களது பிள்ளைகள் இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய போராட்டத்தையும் இந்த நீதி கோருகின்ற செயற்பாட்டையும் முன்னெடுக்க வேண்டியவர்களாகத்தான் இருக்கின்றனர்.

இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாய்மார் நோய் ஏழ்மை உளவியல் தாக்கம் என்று ஒட்டுமொத்த பாதிப்புக்களுக்கும் உள்ளாகியிருக்கின்றனர் ஆனாலும் கூட எத்தனை வருடங்கள் கடந்தாலும் தங்களுடைய பிள்ளைகளுக்கு தங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிவதற்கு ஒன்று கூடியுள்ளனர்.

காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் நட்ட ஈடுவழங்குவதற்காகவா? அல்லது புள்ளிவிபர கணக்கெடுப்பிற்காகவா? ஓட்டுமொத்த சர்வதேசத்தையும் ஏமாற்றுகின்ற வகையில் இண்டு வருட கால அவகாசம் வரும் மார்ச் மாதத்தில் முடிவடைகின்றது.

பாதிக்கப்பட்ட எங்களுடைய தரப்பை ஒருதரப்பாக ஏற்றுக்கொள்ள சர்வதேசம் தயாராக இல்லை, ஆனால், பாதிப்பை ஏற்படுத்திய இலங்கை அரசாங்கத்தை ஒரு தரப்பாக சர்வதேசம் ஏற்றியிருக்கின்றது எனவே இந்த நிலைமை மாற வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.