பொலிவூட்டின் முன்னணி சுப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப் பச்சன் ‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

பொலிவூட்டின் சுப்பர் ஸ்டாரும் மூத்த நடிகருமான அமிதாப் பச்சனும், இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யாவும் இணைந்து உயர்ந்த மனிதன் என்ற படத்தில் நடிக்கிறார்கள். இதனை இயக்குநர் தமிழ்வாணன் இயக்குகிறார்.

படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்குபற்றி இயக்குநரும், இப்படத்தின் நாயகனுமான எஸ்.ஜே.சூர்யா மேலும் தெரிவித்ததாவது,

‘இயக்குநர் தமிழ்வாணன் கடந்த இரண்டு வருடமாக இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். 

இதனை அமிதாப் பச்சனிடம் கதையை சொல்லி சம்மதம் வாங்குவதற்காக அவரை சந்தித்த போது, அவர் அடுத்த ஆண்டு முழுவதும் பிசி என்பதை அவரின் கால்ஷீட் டைரியை காட்டினார். ஆனால் கதை பிடித்துபோனதால் முப்பத்தைந்து நாள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

 இந்த படத்தின் மூலம் இந்தியாவின் சுப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நான் இந்தியில் நாயகனாக அறிமுகமாகிறேன்.

 இந்த படம் ஒரே சமயத்தில் இந்தி மற்றும் தமிழில் தயாராகவிருக்கிறது.இந்த படத்தின் தலைப்பை எங்களுக்காக விட்டு கொடுத்த ஏ.வி.எம். நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.’ என்றார்.