(நா.தனுஜா)

நவீன தொழில்நுட்பத்தின் காரணமாக ஏற்படும் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய அதேவேளை, மீளப்புதுப்பிக்கத்தக்க வளங்களை செயற்றிறனாகப் பயன்படுத்தி, பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச நாடுகளின் பங்களிப்போடு 8 ஆவது பாதுகாப்பு செயலமர்வு இன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. 

இரு நாட்கள் நடைபெறவுள்ள இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து  கொண்டு விசேட உரையாற்றிய போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

பயங்கரவாதம், காலநிலை மாற்றம், இயற்கை அனர்த்தங்கள், ஆட்கடத்தல், அரசியல் செயற்பாடுகள், பூகோளமயமாக்கல், பொருளாதாரநிலை போன்ற பல்வேறு காரணிகள் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. 

இவற்றில் எல்லைப்படுத்தப்படாத பரவலடையும் வன்முறை குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளது. சமூகவலைத்தளங்களில் யார் வேண்டுமானாலும், எவ்வகையான கருத்தையும், குறுகிய நேரத்தில் வெளியிடும் சந்தர்ப்பம் உள்ளது. இது பாரியதொரு சவாலாகும். 

அதேபோன்று இணையவழி குற்றங்கள்(சைபர் க்ரைம்) தற்போது அதிகரித்து வருகின்றன. இணையம் மூலம் ஒருவருடைய தனிப்பட்ட தரவுகளை திருடக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. பாதுகாப்பிற்கு நேரடியாக ஏற்படக்கூடிய சவால்களை விடவும், இவ்வாறான எதிர்வுகூற முடியாத மறைமுக அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்துவது கடினமாகும்.

மேலும் தற்போது தேசிய பாதுகாப்பை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக பொருளாதாரம் மாற்றமடைந்து வருகின்றது. பொருளாதாரத்தில் ஏற்படும் தளம்பல்நிலை மத்தியதர மக்களை வெகுவாகப் பாதிக்கும். 

அவ்வகையில் நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்வதில் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை என்பன இன்றியமையாதனவாகும் என்றார். 

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியா உள்ளடங்கலாக 45 நாடுகளின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமான இந்த மாநாட்டில் அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, கனடா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்க நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் உள்ளிட்ட 45 நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.