(எம்.சி.நஜிமுதீன்)

கூட்டு எதிரணியினர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சிப் பேரணியில் கூட்டு எதிர்க் கட்சியினர் மாத்திரமல்லாது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பினரும் இணைந்து கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பொராளை என்.எம்.பெரேர நிலையத்தில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கூட்டு எதிரணியின் இந்த பேரணியால் செப்டெம்பர் மாதம் 05 ஆம் திகதி முழுக் கொழும்பும் ஸ்தம்பிதமடைவதனால் அன்றைய தினம் அலுவலகங்களில் தமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எவராவது திட்டமிட்டிருப்பின் அவர்கள் அந்த பணியினை வேறு ஓர் தினத்திற்கு மாற்றிக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் அன்றைய தினம் பாடசாலைகளை நடத்துவதிலும் சிக்கல் ஏற்படும் என்றும் தெரிவித்த அவர், மக்கள் எழுச்சிப் பேரணியை முடக்குவதற்கு அரசாங்கம் பல்வேறு சதிமுயற்சிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.