(இரோஷா வேலு) 

கொழும்பில் இடம்பெற்ற சுற்றிவளைப்புகளின் போது இருவேறு பகுதிகளிலிருந்து இருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.இதன்போது, பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 90 ஆம் இலக்க தோட்ட பகுதியில் வைத்து பேலியகொட மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் 15 கிராம் 200 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

நீர்கொழும்பு வீதி பேலியகொடவைச் சேர்ந்த 33 வயதுடைய ரணேபுர தேவகே சாந்த குமார என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை நேற்று அளுத்கடை 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

அதேபோல், வெலிகட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகா வீதியில்  வைத்து மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் 10 கிராம் 760 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினுடன் வெலிகடையைச் சேர்ந்த 33 வயதுடைய நாவலகே லசந்த சேனாநாயக்க என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை நேற்று அளுத்கடை 6 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.