தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்கு சாத்தியமில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

‘பா.ஜ.க.வினர் அரசியலமைப்பு சட்டத்தையே மாற்ற வேண்டும் என முடிவெடுத்துள்ளார்கள். பா.ஜ.க.வின் கொள்கைகள் நாட்டை பின் நோக்கி கொண்டு போகக்கூடியது. இதை அனைத்து ஜனநாயக, மதச்சார்பற்ற, இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்த்து மத்திய அரசை வீழ்த்த வேண்டும்.

பல ஆண்டுகள் போராடி காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதிக அளவு தண்ணீர் வந்தும் அதை சேமிக்க முடியவில்லை, கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. அதிக அளவு மணல் கொள்ளை, நீர் நிலைகள் முறையாக தூர்வாராதது ஆகியவற்றால்தான் தண்ணீர் கடைமடை வரை செல்லவில்லை.

 இதற்கு முழு காரணம் அ.தி.மு.க அரசு தான். நீர் நிலைகள் மூடுவது தொடர்பாக பொதுப்பணித்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

 தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் விரும்புகிறார்கள். மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்தும் மத்திய அரசை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கவும், தமிழ்நாட்டில் புதிய மாற்றத்தை கொண்டு வரவும் ஸ்டாலின் தி.மு.க வின் தலைவராகியிருப்பது பாராட்டுக்குரியது. 

தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை. மதவாத கட்சியை எதிர்க்க வேண்டும் என்பதில் தி.மு.க.வினர் உறுதியுடன் இருக்கிறார்கள். மதவாத சக்தியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அணி சேர்ந்து இருக்கிறோம். அது வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.’ என்றார்.