(நா.தினுஷா)

கூட்டு எதிர் கட்சியினரின் கொழும்பு நோக்கிய அரச எதிர்ப்பு பேரணி நாட்டு மக்களை ஏமாற்றும் மற்றுமொரு நாடகமாகவே காணப்படுகின்றது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுனில் இன்துனில் துசார, இவ்வாறான கோஷங்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் அச்சப்படாது எனவும் குறிப்பிட்டார். 

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் எழுந்துள்ள சவால் குறித்து விளக்கமளித்தப்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

கூட்டு எதிரணியினரின் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அரசியல் அரங்கில் ஒவ்வொரு நாளும் புதிய போசுப்பொருளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் தமது அரசியல் இலாபத்துக்காக மக்களின் கவனத்தை தன்பக்கம் திருப்புவதற்கான முயற்சிகளுமாகவே அமைந்துள்ளது. 

சர்வதேசத்தின் முதலீடுகள் இலங்கைக்கு அவசியமாகவும் காணப்படுகின்றது. வருமானத்தை அதிகரித்தால் மாத்திரமே சர்வதேசத்துடன் போட்டியிட கூடிய கடனற்ற நாடாக இலங்கையை மாற்றியமைக்க முடியும். 

வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்களின் போது அறிவற்ற வகையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லை. அதனைப்பற்றி நன்கு ஆராய்ந்தே ஒப்பந்தங்களுக்கு இணக்கம் தெரிவிக்கும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.