இந்தியாவில், பெங்களூர் ஜே.பி.நகரில் உள்ள சகாம்பரி நகரில் வசித்து வந்த 65 வயதுடைய  பரமேஸ் என்பவர், ஓய்வு பெற்ற அரசு ஊழியராவார். இவருடைய மனைவி வசந்தி. இந்த தம்பதிக்கு சந்தன், சேத்தன் என்று 2 மகன்கள் உள்ளனர்.

சந்தன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி தனியாக வசித்து வருகிறார். சேத்தன் தொழில்அதிபராக இருக்கிறார். இவர், ஊதுபத்தி தயாரித்து மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார்.

பரமேஸ் தனக்கு சொந்தமான வீட்டின் முதல் மாடியில் மனைவி வசந்தியுடன் வசித்து வந்தார். தரைதளத்தில் சேத்தன் மட்டும் வசித்து வருகிறார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு உடல் நலக்குறைவால் வசந்தி இறந்து போனார். இதன் தொடர்ச்சியாக, பரமேசின் பெயரில் உள்ள சொத்துகளை தனது பெயருக்கு எழுதி கொடுக்க வேண்டும் என்று சேத்தன், தந்தை பரமேசிடம் கேட்டு வந்துள்ளார். இதற்கு பரமேஸ் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில், சொத்து பிரித்து கொடுக்காவிட்டால் நீதமன்றில் வழக்கு தொடரப்படும் என்று குறிப்பிட்டு உள்ளதாக தெரிகிறது. இருந்தும், சேத்தனிடம் சென்று ‘நேரம் வரும்போது சொத்துகளை உன் பெயருக்கு எழுதி வைக்கிறேன். இப்போது சொத்துகளை எழுதி கொடுக்க முடியாது‘ என்று கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சேத்தன், தந்தை பரமேசுக்கு மிரட்டியுள்ளார். 

இதற்கு அஞ்சாத பரமேஸ் வீட்டில் இருந்து வெளியேறி முதல் தளத்துக்கு சென்றுள்ளார். இந்த வேளையில், அங்கு சென்ற சேத்தன், பரமேசின் கண்களை விரலால் தோண்டினார். இதனால் பரமேசியின் ஒரு கண்ணில் இருந்த கருவிழி கீழே விழுந்தது. இன்னொரு கண்ணில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனால் பரமேஸ் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அவர்கள் சேத்தனை பிடித்து வைத்து கொண்டதோடு, பரமேசை மீட்டு அருகே உள்ள தனியார் கண் வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இருப்பினும், பரமேசுக்கு மீண்டும் கண்பார்வை கிடைப்பது கடினம் என வைத்தியர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் பெரும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.