உல­கெலாம் நிறைந்து விளங்­கு­கின்ற எல்லாம் வல்ல பரம் பொரு­ளான சிவ­பெரு­மா­னுக்­கு­ரிய விர­தங்­களுள் சிறப்­பு­மிக்க விரதம் சிவ­ராத்­திரி விர­த­மாகும். இது மிக்க மகி­மையும் மகத்­து­வமும் நிறைந்து விளங்­கு­வதால் மகா சிவ­ராத்­திரி என்று அழைக்­கப்­ப­டு­கின்­றது.

சைவ சம­யி­களால் பெரிதும் விரும்பி இன்று அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்ற இந்த சிவ­ராத்­திரி விரதம் மாசி மாதத்­திலே வரு­கின்ற அப­ர­பக்க சதுர்த்­தசி தினத்­தன்று இரவு வழி­பாட்­டுக்­கு­ரி­யது.இந்த விர­தத்தில் நள்­ளி­ரவு பன்­னி­ரண்டு மணி லிங்­கோற்­பவ கால­மாகும்.

இன்­றைய சிவ­ராத்­திரி பற்­றிய ஒரு வர­லாறு தொன்­று­தொட்டு நிலவி வரு­கின்­றது. அதா­வது சிவ­பெ­ருமான் சோதி­வ­டி­வி­ன­ராகி ஒளிப்­பி­ழம்­பாக நின்ற நாளே சிவ­ராத்­தி­ரி­யாகும். இந்த சிவ­ராத்­திரி விர­தத்தை முறை­யாக அனுட்­டிக்­க­வேண்டும். விளை­யாட்­டாக எண்­ணக்­கூ­டாது. நித்­திரை செய்­யாது கண் விழித்­தி­ருந்தால் மட்டும் போதாது. இன்று மதியம் ஒரு­பொ­ழுது மட்டும் உண­வெ­டுத்து இரவு சிவா­ல­யத்­திற்குப் போய் சிவ வழி­பாடு செய்தல் வேண்டும்.

இயன்­ற­வரை தேவா­ர­பா­ரா­யணஞ் செய்து சிவ தோத்­தி­ரங்­களைப் பாடிக்­கொண்டோ அல்­லது புராண படன விரி­வு­ரை­களைக் கேட்­டுக்­கொண்டோ காலங்­க­ழிக்­கலாம். துளி­யேனும் கெட்ட எண்­ணங்கள் வரக்­கூ­டாது. பக்தி நிறைந்த சிவ சிந்­த­னை­யுடன் ஸ்நானஞ்­செய்து சந்­தியா வந்­தனம் முடித்துத் திரு­நீறு தரித்து நான்கு ஜாமங்­களும் சிவ­வ­ழி­பாடு செய்தல் வேண்டும்.

முதலாம் ஜாமத்­திலே பஞ்ச கவ்­வி­யத்தால் அபி­ஷே­கித்து சந்­தனக் குழம்பு சாத்தி வில்வம் அல்­லது தாமரைப் பூவால் அர்ச்­சித்து அமுது படைத்து, தூப­தீப வழி­பாட்­டி­யற்றி வணக்கஞ் செலுத்­து­தல்­வேண்டும். இரவு நடு­நி­சியில் லிங்­கோற்­பவ காலத்­திலே சிவ தோத்­திரம் பாடி இறை தியா­னத்­துடன் எல்லாம் வல்ல சிவ­பெ­ரு­மானை வணங்கி நிற்க வேண்டும். முழு இரவும் கண் விழிக்க முடி­யா­த­வர்கள் நள்­ளி­ரவு வரை விழித்­தி­ருந்து வணங்­குதல் வேண்டும்.

இன்­றைய சிவ­ராத்­திரி பற்­றிய வர­லாற்றுச் சான்­றாக பிரம்மா விஷ்­ணுவும் அடி­மு­டி­தே­டிய விடயம் கூறப்­ப­டு­கின்­றது. ஒரு கற்­பாந்த காலத்­திலே படைத்தல் தொழில் செய்யும் பிரம்­மாவும் காத்தல் தொழில் செய்யும் விஷ்­ணுவும் தாமே பெரி­யவர் என்று கூறி சண்­டை­யிட்­டுக்­கொண்­டார்­களாம்.

அப்­போது பரம்­பொ­ருளான சிவ­பெ­ருமான் அவர்­களின் முன்னே ஒரு சோதிப் பிழம்­பாகத் தோன்றி "இந்தச் சோதியின் அடி­யையோ அன்றி முடி­யையோ யார் காண்­கின்­றார்­களோ அவர்­களே பெரி­யவர்" என்று அச­ரீ­ரி­யா­கவும் சொல்லி வைத்­தாராம். அதைக் கேட்­ட­வு­டனே பிரம்மா தான் முடியைக் கண்டு வரு­வ­தா­கச்­சொல்லி அன்­னப்­பட்சி உரு­வ­மெ­டுத்து வானத்தின் மீது பறந்து சென்றார்.

விஷ்ணு தான் அடியைக் கண்டு வரு­வ­தாகக் கூறிப் பன்றி உருவம் எடுத்துக் கொண்டு நிலத்தைக் குடைந்து கொண்டு கீழே சென்றார். இரு­வ­ராலும் எதை­யுமே காண முடி­ய­வில்லை.

ஆனால், பிரம்­மாவோ தான் முடியைக் கண்­ட­தாகப் பொய் கூறி­யது மட்­டு­மல்­லாமல் தாழம்­பூ­வையும் பொய் சாட்சி சொல்ல வைத்தார். இவ்­வாறு பொய் பேசிய கார­ணத்தால் பிரம்­மா­வுக்குக் கோயிலே இல்­லாமற் போயிற்று. தாழம்பூ பூசைக்கு எடுக்­கப்­ப­டு­வ­தில்லை. மகா விஷ்­ணுவோ தன்னால் முடி­யாது என்று பணிந்து வணங்­கினார். அவர் உண்மை பேசிய கார­ணத்தால் விஷ்­ணு­வுக்குக் கோயில் இருக்­கின்­றது. இப்­படி இறைவன் சோதி­யாக நின்ற நாளே சிவ­ராத்­திரி.

இது ஒரு புற­மி­ருக்க, இன்­னொரு கதையும் இருக்­கி­றது. முன்­னொரு காலத்­திலே ஒரு நாள் பிரம்ம தேவ­ரிடம் சென்ற முனி­வர்கள் தாங்கள் தவஞ்­செய்ய ஓரி­டத்தைத் தேர்ந்­தெ­டுத்துத் தரு­மாறு வேண்­டி­னார்­களாம். அதற்கு அவர் ஒரு தருப்­பையை எடுத்து வளைத்து உருட்டி"இது எங்கு போய் விழு­கின்­றதோ அந்த இடத்தில் தவஞ்­செய்­யலாம்" என்று சொன்­னாராம்.

முனி­சி­ரேஷ்­டர்­களும் அந்தத் தருப்பை வீழ்ந்து கிடந்­த­ இ­டத்தை அடைந்து தவத்தை மேற்­கொண்­டார்கள். அந்த இடம் நைமி­ச­வனம் என அழைக்­கப்­பட்­டது. ஒரு­முறை அந்த வனத்­துக்கு சூத­மகா முனி­வர்­வந்தார். அவரை எதிர்­கொண்டு வர­வேற்ற முனி­வர்கள் அவ­ரிடம் "சுவாமி! சிவ­கதி பெற எளி­தாக அனுட்­டிக்கக் கூடிய விரதம் ஏதா­வது உண்டா?” என்று பணிந்து கேட்­டனர். அதற்கு அவர் "நன்று கேட்­டீர்கள். சிவ­பெ­ரு­மா­னு­டைய திவ்ய திரு­வ­ருளைப் பெறு­வ­தற்கு சிவ­ராத்­திரி விர­தமே சிறந்த விரதம். இந்த விர­தத்தை முறைப்­படி அனுட்­டித்தால் அந்­த­ணர்­க­ளுக்கு தானம் கொடுத்த பலனும் அநேக யாகங்­களைச் செய்த பலனும் கங்கை முத­லான தீர்த்­தங்­களில் மூழ்கி நீரா­டிய பலனும் கிடைக்­கப்­பெறும்" என்­றாராம்.

மேலும் இப்­ப­டியும் கூறப்­ப­டு­கின்­றது.

இந்த விர­தத்தை மேற்­கொண்ட உமா­தே­வியார் வேதா­கம விதிப்­படி நாலு சாமமும் சிவனை அர்ச்­சித்து வணங்கி "பிரா­ண­நா­ய­கரே! நான் தங்­க­ளைப்­பூ­சித்த இந்த ராத்­தி­ரியே சிவ­ராத்­தி­ரி­யாகும். இன்று தேவ­ரீரைப் பூசித்­த­வர்கள் பர­மா­னந்த முத்திப் பேற்­றினைப் பெற­வேண்டும். அதற்கு நீங்கள் திரு­வு­ள­மி­ரங்க வேண்டும்" என்று பணி­வோடு கேட்­டுக்­கொண்டார். இப்­படி உமையாள் கேட்­ட­வு­டனே சிவனும் புன்­மு­றுவல் பூத்­த­வண்ணம் "அப்­ப­டியே ஆகட்டும்" என்று விடை பகர்ந்து திருவாய் மலர்ந்தருளினார் அன்று முதல் சைவ சமயிகள் இவ்விரதத்தை விரும்பி அனுட்டித்து வருவதாகக் கூறப்படுகின்றது. இப்படிச் சிவராத்திரி பற்றிப் பலவிதமாகக் கூறப்படுகின்றது.

எனவே, இந்தச் சிவபிரானுக்குரிய இன்றைய சிவராத்திரி விரதத்தை நாங்கள் அனைவரும் முறைப்படி அனுட்டித்து எம் பெருமானுடைய திருவருட் கடாட்சத்துக்கு ஆளாகி அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு நற்கதி அடைவோமாக.

தெய்வத் தமிழ்ச் சுடர்

இராசையா ஸ்ரீதரன்