சிரிய அரசாங்கம்  பொதுமக்கள் மீது இரசாயன ஆயுத தாக்குதல்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதா என்பதை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருவதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

சிரியாவில் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இறுதிப்பகுதி மீது  சிரிய அரசாங்கம் தாக்குதலை மேற்கொள்வதற்கு தயாராகி வரும் நிலையிலேயே சிரிய அரசாங்கம்  பொதுமக்களின் மீது மீண்டும் இரசாயன ஆயுத தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என அமெரிக்கா அச்சமடைந்துள்ளது.

கிளர்ச்சிக்காரர்களிடமிருந்து சிரிய படையினர் கடும் எதிர்ப்பை சந்திக்க கூடும் இதன் காரணமாக அவர்கள் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தகூடும் என அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்.

கடந்த காலங்களை போன்று ஹெலிக்கொப்டரிலிருந்து குளோரின் வாயு தாக்குதல்கள் இடம்பெறலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் வேறு பகுதிகளிற்கு இடமாற்றம் செய்யப்படுவதற்கான அறிகுறிகள்  தென்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்காத அதேவேளை கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இட்லிப்பகுதியை நோக்கி விசேட பயிற்சி பெற்ற  படையணியை நகர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட பகுதி துருக்கிக்கு அருகில் உள்ளதால்  முழுமையான மோதல் வெடித்தால் சிரியா ரஸ்யா துருக்கி மற்றும் அமெரிக்காவின் விமானங்கள் ஒன்றையொன்றை எதிர்க்கொள்ளும் ஆபத்தை எதிர்கொள்ளநேரிடலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அமெரிக்காவும் அதன் சகாக்களும் இரசாயன ஆயுதங்கள் என்ற போர்வையில் விமான தாக்குதல்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டு வருவதாக ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமையும் கரிசனைகளை அதிகரித்துள்ளது.