(இரோஷா வேலு) 

நாட்டில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 7 கிராம் 280 மில்லிகிராம் ஹெரோயினுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

அதன்படி மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காப்பவத்த பகுதியில்  2 கிராம் 220 மில்லிகிராம் ஹெரோயினுடன் 31 வயதுடைய கொடிகாம பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அவரை இன்று மங்கொடவில நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் செப்டெம்பெர் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அதேபோல், முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொக்லைன் சந்தியில் வைத்து 2 கிராம் 910 மில்லிகிராம் ஹெரோயினுடன் அளுத்மாவத்தை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவர் கைதுசெய்யப்பட்டார். இவர் இன்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். 

மேலும் பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லிமுள்ள பகுதியில் வைத்து 2 கிராம் 280 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினுடன் 22 வயதுடைய இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டதுடன் இவரை இன்று பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.