(நா.தனுஜா)

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியா உள்ளடங்கலாக 45 நாடுகளின் பங்குபற்றுதலுடன் இவ் வாண்டுக்கான சர்வதேச மட்டத்திலான 8 ஆவது பாதுகாப்பு செயலமர்வு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெறும் பாதுகாப்பு செயலமர்வு நாளை புதன்கிழமையும் நாளை மறுதினம் வியாழக்கிழாமையும் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, கனடா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்க நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் உள்ளிட்ட 45 நாடுகள் பங்குபற்றவுள்ளதுடன், அந்நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் 100 பேர் வரை  கலந்துகொள்ளவுள்ளனர்.

இச் செயலமர்வு பூகோள ரீதியான இடையூறுகளுக்கு மத்தியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் எனும் அடிப்படையில் இடம்பெறவுள்ளதுடன், இதன்போது பல்வேறு நாடுகளையும் சேர்ந்த பிரதிநிதிகள், புத்திஜீவிகள் மற்றும் வல்லுனர்கள் தமது அனுபவங்களையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.