இந்தியா - பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதிய ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று மழை காரணமாக போட்டி தொடங்க தாமதமானதால் 20 ஓவர்களுக்கு பதிலாக 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் களத்தடுப்பை முடிவு செய்தது. பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் அதிரடியாக ஓட்டங்களைக் குவிக்க முயன்றனர். ஆனால் நெஹ்ராவும், பும்ராவின் பந்து வீச்சில்  தமிம் இக்பால் 13 ஓட்டங்களுடனும், சவுமிய சர்க்கார் 17 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அல் ஹசன் அதிரடியாக ஆடி 21 ஓட்டங்களைக் குவித்தார். 

கடைசி கட்ட ஓவர்களில் பங்களாதேஷ் அணியின் மஹ்மதுல்லா அதிரடி ஆட்டத்தால் அந்த அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. 

பங்களாதேஷ் அணியில் அதிகப்பட்சமாக மஹ்மதுல்லா 33 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். சபீர் ரகுமான் 32 ஓட்டங்களை எடுத்தார்.பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்கள் 5 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களை எடுத்தது. 

இந்தியாவிற்கு 121 ஓட்டங்கள் என்ற வெற்றி  இலக்குடன் களமிறங்கியது. ரோஹித் சர்மா 1 ஓட்டத்துடன் வெளியேறி  ஏமாற்றம் அளித்தார். அதன் பிறகு வீராட் கோலியும் தவானும் நிதானமாகவும் ஆடி ஓட்டங்களை சேர்த்தார்கள். 

அதிரடியாக ஆடிய தவான் 60 ஓட்டங்களை எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். விராட் கோலி 28 பந்துகளில் 41 ஓட்டங்களையும், டோனி 6 பந்துகளில் 20 ஓட்டங்களையும் எடுத்தனர். ஆட்டநாயகனாக 60 ஓட்டங்கள் எடுத்த தவான் தேர்வு செய்யப்பட்டார். 

இதன்படி டோனி தலைமையில் இந்தியா இரண்டாவது முறையாக ஆசியக் கிண்ணத்தை வென்றுள்ளது. இதுவரை மொத்தமாக 6 முறை ஆசியக் கிண்ணத்தை வென்றுள்ளது இந்தியா.