(நா.தினுஷா)

சர்வதேச வர்த்தக அமைச்சு, சர்வதேசத்துடன் தன்னிச்சையாக உடன்படிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இது குறித்து விளக்கமளிக்கும் வகையில் எதிர்வரும் வியாழக்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்றினை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. 

இது குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் அரித அளுத்கே கூறுகையில், 

தேசிய வர்த்தக கொள்கைகள் எதுவும் இல்லாமல் சர்வதேச வர்த்தக உடன்படிக்கை மேற்கொண்டமைக்கு கடந்த காலங்களில் அரசாங்கத்துக்கு எதிராக பலத்த எதிர்ப்பினை வெளியிட்டிருந்தோம். அத்தோடு கடந்த ஜனவரி மாதம் சிங்கப்பூர சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. அதன் பின்னர்  இந்த உடன்படிக்கையில் காணப்படும் வர்த்தக ஊழல்கள் தொடர்பாக மக்களுக்கு தெளிவுப்படுத்தியதோடு வேலைநிறுத்த போராட்டங்களையும் மேற்க்கொண்டிருந்தோம். 

இந் நிலையில் சர்வதேசத்துடனான உடன்படிக்கைகளை மேற்கொள்வதில் சர்வதேச வர்த்தக அமைச்சு தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றது. இது குறித்து விளக்கமளிக்கும் வகையிலேயே எதிர்வரும் வியாழக்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்றினை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். அத்துடன் இக்  கலந்துரையாடலுக்கு சகல அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்ளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.