திருகோணமலையிலுள்ள சீமெந்து தொழிற்சாலையில் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சீனக்குடா  ஜனசக்திபுரத்தைச் சேர்ந்த அன்டனி ஸ்டீபன் என்பரே இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளார். இவர் குறித்த சீமெந்து தொழிற்சாலையில் கடந்த 4 ஆண்டுகள் கடமை புரிந்துள்ளார்.

புதிதாக கொண்டுவரப்பட்ட இயந்திரத்தில் கப்பலில் இருந்து வரும் சிலிக்கன் மண்ணை ஏற்றி வரும் போது அதிக பாரம் காரணமாக சரிந்த குறித்த இயந்திரத்திற்கு இடையில் இளைஞன் சிக்கியதால்  உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாறு அடிக்கடி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன இதில் பலர் உயிரிழந்துள்ளனர். இங்கு தொழில் செய்வோருக்கு உரிய பாதுகாப்பு  அங்கிகள் கருவிகள் என்பன வழங்கப்படுவதில்லை அத்துடன் தொழிற்சாலை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் என இரண்டு வகையானவர்கள் தொழில் புரிகின்றனர்.

இதில் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்ட வேலைகளுகான பணியாளர்கள் மத்தியில் இவ்வாறான விபத்துச் சம்பவங்கள் இடம்பெறுவதாக சக தொழிலாளர்கள்  தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் பலியானவரின் சடலம் மாலை 3.30 மணியளவில் திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.