மியன்மார் படையினர் ரொகிங்யா மக்களிற்கு எதிராக இனப்படுகொலைநோக்குடன் படுகொலைகளையும் பாலியல் வன்முறைகளையும் முன்னெடுத்துள்ளனர் என ஐநா தெரிவித்துள்ள  விசாரணையாளர்கள் இதற்காக மியன்மார் படைத்தளபதியையும் அதிகாரிகளையும் விசாரணை செய்யவேண்டும் என கோரியுள்ளனர்.

ரகைனில் இடம்பெற்ற குற்றங்களும் அவை முன்னெடுக்கப்பட்ட விதமும் ஏனைய சூழமைவில் இனப்படுகொலை நோக்கங்கள் நிறைவேறுவதற்கு அனுமதிக்கப்பட்டவை போன்று காணப்படுகின்றன என மியன்மாரிற்கான ஐநாவின் சுயாதீன சர்வதேச குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இராணுவத்தின் உயர் அதிகாரிகளை விசாரணை செய்யவேண்டும் என்பதை உறுதி செய்யக்கூடிய போதிய தகவல்களும் ஆதாரங்களும் உள்ளன என ஐநா குழு தெரிவித்துள்ளது.

ரொகிங்யா இனத்தவர்களிற்கு எதிரான இனப்படுகொலைக்கான பொறுப்பு குறித்து தகுதி வாய்ந்த நீதிமன்றமொன்று விசாரிக்கவேண்டும் எனவும்ஐநா தெரிவித்துள்ளது.

ராதிகா குமாரசுவாமி  மருசுகி தருஸ்மன் உட்பட சர்வதேச நிபுணர்கள் அடங்கிய ஐநா குழு மியன்மாரின் இராணுவ தளபதி ஜெனரல் மின் அவுங் லயிங்கும் ஏனைய ஐந்து ஜெனரல்களும் நீதியை எதிர்கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை அனைத்து குற்றவாளிகளும் பொறுப்புக்கூறப்படும் நிலையை உருவாக்க வேண்டும், என தெரிவித்துள்ள ஐநா நிபுணர்கள் குழு சர்வதேச நீதிமன்றத்திற்கு இந்த விவகாரத்தை பரிந்துரை செய்வதன் மூலமோ அல்லது தீர்ப்பாயமொன்றை உருவாக்குவதன் மூலமோ இதனை செய்யலாம் என தெரிவித்துள்ளது.

மேலும் சர்வதே சட்டங்களின் கீழ் மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக பயண தடை உட்பட தனிப்பட்ட தடைகளை விதிக்கவேண்டும் எனவும் ஐநா குழு தெரிவித்துள்ளது.