சிங்கள மகா வித்தியாலயத்தில் இயங்கும் இராணுவ படைத்தளத்தை அகற்ற கோரும் எண்ணம் எமக்கு தற்போது இல்லை என யாழ்.சிங்கள மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க தலைவர் கெனடி சேவியர் தெரிவித்துள்ளார். 

கடந்த 1956 ஆம் ஆண்டு தனி சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பின்னர் 1965 ஆம் ஆண்டு சிங்கள மகாவித்தியாலயம் யாழில் நிறுவப்பட்டது. 

அன்று முதல் 1985 ஆம் ஆண்டு வரையிலான கால பகுதியில் யாழில் குறித்த பாடசாலை இயங்கி வந்துள்ளது. 1985 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாடசாலை மூடப்பட்டது. 

இந்நிலையில் குறித்த பாடசாலை கட்டடத்தில் தற்போது இராணுவத்தினர் தமது 512 படைப்பிரிவின் பாரிய முகாமை அமைத்துள்ளனர். 

தற்போது மீளவும் குறித்த பாடசாலையினை ஆரம்பிக்க வேண்டும் என பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளனர். 

அந்நிலையில் , சிங்கள மகா வித்தியாலய கட்டத்தில் இயங்கும் இராணுவத்தினரின் 512 படைத்தளத்தை அகற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளீர்களா என பழைய மாணவர் சங்க தலைவர் கெனடி சேவியரிடம் ஊடகவியலாளர்கள் வினாவிய போது, 

இராணுவ முகாமை அகற்றும் சிந்தனை எம்மிடம் இல்லை. எமக்கு இராணுவ முகாம் அவசியம். முதற்கட்டமாக வாடகைக்கு இடத்தினை பெற்று ஆரம்ப பிரிவினை நடாத்தவே எண்ணியுள்ளோம். 

பாடசாலையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதியுடன் பேசி இருந்தோம். அதனை கேட்டு அவர் மிகுந்த சந்தோசம் அடைந்தார். தன்னால் ஆனா உதவிகளையும் தேவைகளையும் வழங்க உடன்பட்டுள்ளார். 

இதன் முதற்கட்டமாக பாடசாலையை ஆரம்பித்து முன்னேற்றத்தை காட்டிய பின்னர் எமது தேவைகளை கல்வித்திணைக்களத்திடம் கோரி பெற்றுக்கொள்வோம் என தெரிவித்தார்.