(க.கிஷாந்தன்)

மலையக மக்கள் முன்னணியிலிருந்தோ அல்லது தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்தோ விலகப் போவதில்லை என தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இணையப் போவதில்லை எனவும் உறுதிப்பட குறிப்பிட்டுள்ளார்.

அட்டன் அஸ்விக்கா விடுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 

இ.தொ.கா.விலிருந்து எனக்கு அழைப்பும் வரவில்லை. இ.தொ.கா.வுடன் சேர வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. இது ஒரு சோடிக்கப்பட்ட கதை. இதை யார் சோடித்தார்கள் என்று எனக்கும் தெரியவில்லை.

அண்மையில் அட்டனில் எனக்கு பாராட்டு விழா இடம்பெற்றது. இது ஒரு பொதுவான நிகழ்வு. இதில் இ.தொ.கா.வின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இதை வைத்துக்கொண்டு தான் இ.தொ.கா.வோடு இணைய போவதாக காரணமாக கூறிக்கொண்டு பல ஊடகங்கள் இவ்விடயத்தை திரிபுபடுத்தி செய்திகளை வெளியிட்டு வந்துள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு எனக்கும் உள்ள மூன்று வருட கால உறவில் எந்த ஒரு விரிசலும் இல்லை. அதை போன்று மலையக மக்கள் முன்னணியில் உள்ள உறவிலும் எவ்வித மாற்றமும் இல்லை. எங்களது உறவு எதிர்காலத்திலும் நீடிக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், கல்வி இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளர் அனுஷியா சந்திரசேகரன், மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளர் விஜேந்திரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.