(இந்தோனேஷியாவிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

ஆசிய விளையாட்டு ஆண்கள் ஹொக்கியில் வெற்றிகளைக் குவித்து வரும் இலங்கை அணி தனது இரண்டாவது வெற்றியை இன்று பெற்றுக்கொண்டது. லீக் போட்டியில் 3-1 என இந்தோனேஸியாவை தோற்கடித்த இலங்கை தனது இருப்பை உறுதிசெய்துகொண்டது.

இம்முறை ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான ஹொக்கியில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, முதலிரண்டு போட்டிகளிலும் ஜப்பான், கொரியா ஆகிய அணிகளிடம் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், தமது 3 ஆவது லீக் போட்டியில் ஹொங்கொங் அணியை சந்தித்த இலங்கை அணி 4-1 என்ற கோல்கள் அடிப்படையில் தமது முதலாவது வெற்றியை ஹொங்கொங்கை வீழ்த்தி பதிவு செய்தது.

இதேவேளை 4 ஆவது லீக் போட்டியில் இந்தோனேஷியாவை இன்று எதிர்கொண்டது. போட்டியின் 24 ஆவது நிமிடத்தில் சந்தருவன் பிரியலங்க முதல் கோல் அடித்து இலங்கை அணிக்கு முன்னிலையை பெற்றுக்கொடுத்தார். இதற்கு 38 ஆவது நிமிடத்தில் இன்தோனேஸியாவின் ஹக்கீம் வாஹித்தும் ஒரு கோலடித்து பதிலடி தந்தார். இதன்படி முதல் பாதி முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது.

தொடர்ந்து கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணிக்கு 42, 54 ஆவது நிமிடங்களில் கிடைத்த 'பெனால்டி கோர்னர்' வாய்ப்பில் ரணசிங்க கோலடித்து கைகொடுத்தார். ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 3-1 என வெற்றி பெற்றது.