(எம்.மனோசித்ரா)

கூட்டு எதிர்கட்சியினர் அடுத்த மாதம் முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தினால் அரசாங்கத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஜனாபதி , பிரதமர் மற்றும் எதிர் கட்சி தலைவர் பதவி என அனைத்து பதவிகளுக்கும் முயற்சித்து, அவற்றில் பாரிய தோல்வியையே சந்தித்தனர். தற்போது வேறு வேலைகள் எதுவும் இல்லாத காரணத்தினால் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு அரசாங்கத்தை கலைக்க திட்டமிடுகின்றனர். ஆனால் என்ன செய்தாலும் அரசாங்கத்தை அவர்களால் கலைக்க  முடியாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கம் கூடிய விரைவில் கவிழப்போவதாக 2016 இலிருந்தே கூட்டு எதிர்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 16 பேர் அரசாங்கத்திலிருந்து விலகிய சந்தர்ப்பதிலும் இதனையே தெரிவித்தனர். எனினும் தேசிய அரசாங்கம் அவற்றைக் கடந்து மூன்று வருடங்கள் வெற்றிப் பாதையிலேயே பயணித்து வருகின்றது.

ஜனாதிபதி பதவி மற்றும் பிரதமர் பதவியை தாம் பெற்றுக் கொள்ளப் போவதாக அங்குமிங்கும் சென்று கூறிக்கொண்டிருந்தனர். அது முடியாமல் போனதன் பின்னர் எதிர்கட்சி தலைவர் பதவியைக் கோரினார்கள்.

தற்போது  அந்த முயற்சியும் தோல்விலேயே முடிவடைந்துள்ளது. எவ்வாறிருப்பினும் இவர்களால் தற்போது வரை அரசாங்கத்தை துளி கூட அசைக்க முடியவில்லை. 

தற்போது மீண்டும் அடுத்த மாதம் ஆர்பாட்டமொன்றை முன்னெடுக்கப் போவதாகத் தெரிவித்து வருகின்றனர். அதுவும் தோல்வியில் தான் முடிவடையும் என்பதே என்னால் கூறமுடியும்.

அரசாங்கத்தை தொடருவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கக் கூடிய அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மாத்திரமே காணப்படுகின்றது. வேறு எந்த தரப்பினருக்கும் அதைப் பற்றி கருத்து தெரிவிப்பதான  அதிகாரமோ தேவையோ இல்லை. எனவே கூட்டு எதிர்கட்சியினர் எத்தனை முறை அரசாங்கத்திற்கு எதிராக வெடி வைத்தாலும் அரசாங்கம் கவிழாது என தெரிவித்தார்