விவசாயிகள் முகம்கொடுத்த துயரச் சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான பாரிய செயற்திட்டங்கள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

16,000 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் வயம்ப எல செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று பொல்பித்திகமவில் இடம்பெற்றதுடன், அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி தெரிவித்தார்.

எல்லங்கா குளக் கட்டமைப்புடன் தொடர்புடைய 2400 கிராமிய குளங்களை புனரமைக்கும் செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் பொல்பித்திகம கும்புகுலாவ குளத்தருகில் இடம்பெற்றது.

விவசாயிகள் நீண்டகாலமாக முகம்கொடுத்து வந்த நீர் பிரச்சினைக்கு துரித செயற்திட்டத்தின் மூலம் தீர்வு எட்டப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி விவசாயிகளிடமிருந்து அதிக விலைக்கு நெல் கொள்வனவு செய்வதற்காக நெல் விநியோக சபை பாரிய பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார். 

மகாவலி நீரை வடமேல் மாகாணத்திற்கு கொண்டு செல்லும் வடமேல் கால்வாய் செயற்திட்டத்தினூடாக தண்ணீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வடமேல் மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றியமைக்க முடியுமென்று ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். 

கடந்த காலங்களில் இடம்பெற்ற சூழல் அழிப்பின் காரணமாக எதிர்நோக்க நேர்ந்துள்ள விளைவுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் நாடுகளின் வரிசையில் நான்காம் இடத்தில் இலங்கை இருப்பதாக தெரிவிக்கும் ஆய்வுகளையும் இதன்போது சுட்டிக்காட்டினார். 

ஐம்பது வருடங்களுக்கு முன் 97ஆவது இடத்தை வகித்த இலங்கை இன்று இவ்வாறான நிலைமையை எதிர்நோக்க நேர்ந்ததின் காரணம் வியாபாரிகளால் மேற்கொள்ளப்படும் பாரிய சுற்றாடல் அழிப்பு எனத் தெரிவித்த ஜனாதிபதி நிலம் பாலைவனமான பின் எதிர்கால சந்திகள் நீரைத்தேடி வெகு தூரம் செல்ல நேரும். அவ்வகையான துர்பாக்கிய சம்பவம் நேர்ந்தால் காடழிப்புக்கு உடந்தையாக இருந்த அனைவரும் அதற்கு பொறுப்புக் கூற வேண்டுமெனவும் தெரிவித்தார்.

மகாவலி செயற்திட்டத்தில் உள்ளடங்காத, மகாவலி நீரை வடமேல் மாகாணத்திற்கு கொண்டு செல்லும் செயற்திட்டம் மொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தி செயற்திட்டத்தின் மற்றுமொரு பலனாக ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் 2016ஆம் ஆண்டு இது ஆரம்பிக்கப்பட்டது. 

இச்செயற்திட்டம் முடிவடைந்ததன் பின்னர் 105,000 ஏக்கர் அடி மகாவலி நீர் வருடம் முழுவதும் குருணாகல் மாவட்டத்தின் பொல்பித்திகம, எஹெட்டுவெவ, கல்கமுவ, மாஹோ மற்றும் அம்பன்பொல ஆகிய பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. அதன் மூலம் அப்பிரதேசங்களில் இருபோகங்களுக்கும் பயிர்ச் செய்கைக்கான நீர் கிடைக்கப்பெறுவதுடன். அப்பிரதேச மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகின்றது. 

வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் மீஒய, ஹக்வட்டுனாஒய, கலாஒய ஆகிய குளங்களை அண்மித்து இருக்கும் 315 சிறிய குளங்களும், 08 பிரதான குளங்களும் மகாவலி நீரால் பலனடைகிறது. அதற்காக அமைக்கவிருக்கும் பிரதான கால்வாய் 92 கிலோ மீற்றர் நீளமுடையதாகும். 

2400 கிராமிய குளங்களை புனரமைப்பு செய்யும் எல்லங்கா குளக் கட்டமைப்பு செயற்திட்டம் என்பது உலர் வலயத்தில் தற்போது செயழிலந்து காணப்படும் எல்லங்கா குளக்கட்டமைப்பினை மீண்டும் புனரமைப்பு செய்து அப்பிரதேச மக்களுக்கு நீர்ப்பாசனத்திற்கு தேவையான நீரை பெற்றுக்கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும். 

இலங்கையின் கிராமங்களை மையப்படுத்திய நீர்ப்பாசன தொழில்நுட்பமான எல்லங்கா கிராமிய குளக்கட்டமைப்பு முறை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயம் பற்றிய அமைப்பினால் உலகின் முக்கியமான விவசாய மரபுரிமையாக இனங் காணப்பட்டுள்ளது.

இலங்கைக்கே உரித்தான இந்த பாரம்பரிய விவசாயத் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்நாட்டின் விவசாயத் துறையையும் விவசாய பொருளாதாரத்தையும் புத்துயிர் பெறச் செய்யும் நோக்குடன் ஜனாதிபதி வழிகாட்டலின் கீழ் இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 

இச்செயற்திட்டத்தின் கீழ் குருணாகல் மாவட்டத்தில் மாத்திரம் 300 குளங்கள் புனரமைப்பு செய்யப்படவுள்ளதுடன், பொல்பிட்டிகம, கும்புகுலாவ குளத்தின் புனரமைப்பு செயற்பாடுகளை ஆரம்பிப்பதன் ஊடாக இந்த செயற்திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுகின்றது. 

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து வடமேல் கால்வாயின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடமேல் கால்வாய் அபிவிருத்தி செயற்திட்டத்திற்கான அலுவலகமும் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. 

சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் பிரதேசங்களுக்கு தூய குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட 09 நீர் சுத்திகரிப்பு தொகுதிகளை டிஜிட்டல் தொலை தொடர்பு தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி திறந்து வைத்தார்.

அமைச்சர்களான காமினி ஜயவிக்ரம பெரேரா, எஸ்.பி.நாவின்ன, துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர மற்றும் வடமேல் மாகாண மக்கள் பிரதிகள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, செயற்திட்டத்தின் பொறியியலாளர்கள், பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.