(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

தேர்தலுக்கு அஞ்சுகின்ற  அரசாங்கம் பல்வேறு உத்திகளை கையாண்டு தேர்தலை பிற்போட முயற்சித்து வருகின்றதாக பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். 

புதிய தேர்தல் முறைமையை அரசாங்கத்தில் உள்ள  அனைவரும் இணைந்தே உருவாக்கினர், இன்று அரசாங்கத்தில் பல பிரிவுகளாக மாறி இதனை எதிர்க்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர்  தேர்தல் தொடர்பாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் இரண்டாவது சட்டமூலமாக எல்லை நிர்ணய அறிக்கை  உள்ளது. 

புதிய முறையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலத்தை சமர்பித்தது. இதன்படி புதிய முறையில் தேர்தல் நடந்தபோதிலும்  இன்னும் அந்த சபைகளுக்கு தலைவர்களைக் கூட தெரிவு செய்ய முடியாது போயுள்ளது. 

ஜனாதிபதியும் , பிரதமரும் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் மாகாண சபைகள் தேர்தல் சட்டமூலத்தால் அரசாங்கத்திலுள்ள கட்சிகள் பிரிவுபட்டு கிடக்கின்றன. இந்த சட்டமூலத்தை அரசாங்கமே தயாரித்துவிட்டு அதற்கு எதிர்ப்பை ஐக்கிய தேசிய கட்சியே வெளியிடுகின்றது. 

மனோ கணேசன் , ஹக்கீம் , ரிசாத் பதியூதின் , இராதகிருஷ்ணன் எல்லோரும் இதற்கு எதிர்ப்பை வெளியிடுகின்றார்கள்.  

இது பிரச்சினைக்குறியது என்றால் ஏன் அதனை செய்ய வேண்டும். யாரின் தேவைக்காக இதனை செய்தீர்கள். இன்று ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் , ஜே.வி.பியும் மட்டுமே இதற்கு ஆதரவாக இருக்கின்றது. 

எவ்வாறாயினும் எல்லை நிர்ணய அறிக்கை தோல்வியடையச் செய்யப்படவுள்ளது. 2020 அரசாங்கத்தை பெற்றுக்கொள்ளப் போவதாக கூறுகின்றார்கள் உள்ளூராட்சி சபைகளை கைப்பற்ற முடியவில்லை. 

மனோ கணேசன் , தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து உருவாக்கிய இந்த அரசாங்கத்தால் அவர்களுக்கு கிடைத்தது என்ன. இறுதியில் ஒன்றும் கிடைக்கவில்லை.  நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயற்பாடே நடக்கின்றது. 

சில கட்சிகளுக்கு தேர்தலுக்கு செல்ல அச்சம். அதனால் ஒவ்வொரு விடயமாக செய்கின்றனர். மக்கள் சரியானதை வழங்க பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தேர்தலை நடத்துங்கள் அப்போது மக்கள் தீர்ப்பை வழங்குவர் என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாகாண சபைகள் எல்லை நிர்ணய அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.