(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்ததை நான் இதுவரை கண்டதில்லை என பெற்றோலிய துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்ததை அடுத்து சபையில் சர்ச்சையான நிலைமை ஏற்பட்டது.

அமைச்சர்களுக்கு தெரியாமலும் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறாமலும் சிங்கப்பூர் ஒப்பந்தம் நிறைவேற்றியுள்ள தாக கூட்டு எதிரணி இங்கு குற்றம்சுமத்தியது.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுப்பிய மேலதிக கேள்விக்கு அமைச்சர் பதிலளித்ததை அடுத்தே சர்ச்சையான நிலைமை ஏற்பட்டது.

இதன்போது பந்துல குணவர்தன கேள்வி எழுப்பும் போது,

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சிங்கப்பூர் ஒப்பந்ததின் ஊடாக பெற்றோலிய கூட்டுதானம் விற்கப்பட போகின்றதா? சிங்கப்பூர் ஒப்பந்தம் தொடர்பில் நீங்கள் ஏதும் அறிந்துள்ளீர்களா? என்றார்.

இதனையடுத்து பதிலளித்த அமைச்சர் அர்ஜன ரணதுங்க,

எந்த காரணம் கொண்டு நாட்டுக்கு எதிரான திட்டத்தையும் நான் ஆதரிக்கமாட்டேன். அதற்கு இடமளிக்கவும் மாட்டேன். நான் அப்போது முதல் தற்போது வரை அப்படியே செயற்படுகின்றேன். எனினும் சிங்கப்பூர் ஒப்பந்ததை நான் இதுவரை கண்டதில்லை. அது தொடர்பான தெளிவும் தனக்கு இல்லை என்றார்.

இதன்போது குறுக்கிட்டு பேசிய விமல் வீரவன்ச எம்.பி,

அரசாங்கத்தின் பிரதான அமைச்சர் ஒருவர் சிங்கப்பூர் ஒப்பந்ததை காணவில்லை என்று கூறுகின்றார். இது பாரதூரமான விடயமாகும். 

 அமைச்சரவையில் சமர்ப்பிக்காமலேயே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது தொடர்பான அமைசச்சரவை அமைச்சருக்கே புரிந்துணர்வு இல்லை. இரகசியமான முறையில் ஏன் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது என்றார்.

இதனையடுத்து பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல,

சிங்கப்பூர் ஒப்பந்தம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது. குறித்த ஒப்பந்தம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது என்றார்.

இதன்போது எழுந்த எஸ்.பி திஸாநாயக்க எம்.பி தெரிவித்ததாவது,

அமைச்சரவையில் கொண்டு வரப்பட்டது. எனினும் அதன்போது அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கவில்லை. திருத்தங்கள் செய்து மீண்டும் முன்வைக்குமாறு கோரப்பட்டது. ஆனால் அமைச்சரவைக்கு திருத்தங்களுடன்  சமர்ப்பிக்கப்படவில்லை என்றார்.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது இரகசியமாக எதுவும் செய்வதில்லை. அதற்கு நீண்ட கால பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு ஆராய்ந்த பின்னரே முடிவு எடுக்கப்படும்.

சிங்கப்பூர் ஒப்பந்தம் தொடர்பிலும் நீண்டகாலமாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. ஆகவே அனைத்து தரப்புடன் கலந்துரையாடியதன் பின்னரே கைச்சாத்திடப்பட்டது. இரகசியமாக எதுவும் செய்யப்படவில்லை என அமைச்சர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

இதன்போது விமல் வீரவன்ச தெரிவித்ததாவது,

ஹக்கீம் அவர்களே, என்னுடைய குழந்தையும் உங்களுடைய குழந்தையும் வாழ்வதற்கு நாடொன்று இருக்க வேண்டும். ஆகவே இவ்வாறான ஒப்பந்தங்களில் எமக்கு நாடொன்று கிடைக்காது.

 சிங்கப்பூர் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னரே ஜனாதிபதி சிறப்பு குழு அமைத்துள்ளார். இந்த குழுக்களினால் ஒன்றும் நடக்க போவதில்லை. திருத்தங்கள் செய்வதற்கு இரு நாடுகளின் இணக்கம் அவசியமாகும் என்றார்.

அத்துடன் பிறிதொரு கேள்வி நேரத்தின் போது சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம பதிலளிக்கும் போது,

சட்டமா அதிபரின் அனுமதியுடனே சிங்கப்பூர் ஒப்பந்தை கைச்சாத்திட்டோம் என்றார்.

இதனையடுத்து உதய கம்மன்பில எம்.பி கூறும் போது,

சட்டமா அதிபரின் அனுமதியுடன் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் சட்டமா அதிபரின் அனுமதி ஆவணத்தை சபைக்கு ஆற்றுப்படுத்த வேண்டும் என்றார்.