விஜய்சேதுபதியின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் மேற்கு தொடர்ச்சி மலை ரசிகர்களிடமிருந்து மட்டுமல்லாமல் திரையுலகின் பல முன்னணிகளிடமிருந்தும் பாராட்டுகளை குவித்து வருகிறது.

இயக்குநர் பா ரஞ்சித்,‘எளிதில் நெருங்கி விடவே முடியாத எளிமையை, அனாயசமாக கலை என்னும் பேரனுபவத்தை, திரை வழியே கடத்திய இயக்குநர் லெனின் பாரதிக்கும், இசை வழியே உணர்வுகளை சிலுப்பிய முன்னத்தி ஏர் இளையராஜாவுக்கும் நன்றியும் மகிழ்ச்சியும். எளிமைப்படுத்துதல் என்பது ஆகப்பெரும் போர்.’ என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

‘போலித்தனம் அல்லாத, எளிமை மிக்க வாழ்க்கையை நிலத்தோடும், காற்றோடும் மொழியோடும் அதிகாரத்தால் சுரண்டப்படுகிற மனித முகங்களின் சுருக்கத்தில் வழிந்தோடும் எளிமையின் பேரனுபவத்தை மேற்கு தொடர்ச்சி மலை என்னும் மக்களின் சினிமாவில் கொடுத்த இயக்குநர் லெனின் பாரதி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், தயாரிப்பாளர் விஜய் சேதுபதி மற்றும் இந்த திரைப்படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் பெரும் பாராட்டுகள்.

எப்போதும் நல்ல தரமான சினிமாவை ஊக்குவிக்கும் அன்பிற்கினிய தமிழ் திரைப்பட ரசிகர்களே வாருங்கள் மேற்கு தொடர்ச்சி மலை என்னும் மக்களின் சினிமாவை கொண்டாடுவோம். மகிழ்ச்சி’ என்றும் வாழ்த்தியிருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.

இது குறித்து ரசிகர் ஒருவர் தன்னுடைய இணையப்பக்கத்தில்,‘மேற்கு தொடர்ச்சி மலை படமல்ல. கலைப்படமல்ல. அது ஒரு வாழ்வியல் அனுபவம். மேற்கு தொடர்ச்சி மலையில் பயணித்து என்னுடைய கால்கள் சோர்வாக இருக்கின்றன. அங்கு வாழும் மக்களின் பிடிவாத தன்னம்பிக்கையை வார்த்தைகளால் விவரித்திட இயலாது. இதனை ஒரு கலை சார்ந்த அனுபவமாக நுகர்வதை விட ஒரு விசுவல் நாவலை பார்த்த திருப்தி’ என்று பதிவிட்டிருக்கிறார்.

பொதுவாக இது போன்ற தரமான படங்களை உருவாக்க க்ரவுட் பண்ட் என்ற மக்களின் பங்களிப்புடன் படைப்பை உருவாக்குவார்கள் படைப்பாளிகள், ஆனால் இந்த மேற்கு தொடர்ச்சி மலை, மக்களுக்கான மற்றும் மக்களின் பங்களிப்புடன் கூடிய படைப்பாக உருவாகியிருக்கிறது. இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தரவேண்டும்.’ என்றும் இணையத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது.