முல்லை பெரியாறு அணையிலிருந்து அதிகளவில் நீர் திறக்கப்பட்டதால் தான் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது என்ற கேரளாவின் குற்றச்சாட்டு தவறானது என்று முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

‘அதிக அளவிலான வெள்ள நீர் வெளியேறியதால் அழுத்தம் காரணமாக பழைமையான முக்கொம்பு மேலணையில், அணையின் மதகுகள் உடைந்துள்ளது. தற்போது சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 

ஒன்பது மதகுகள் உடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நான்கு நாட்களில் நிறைவடையும். முக்கொம்பில் உடைந்த அணைக்கு பதிலாக 325 கோடி இந்திய ரூபா மதிப்பீட்டில் புதிதாக கதவணைகள் கட்டப்படும். 

அதே போல் கொள்ளிட்டத்தின் வடக்கு பகுதியில் உள்ள அய்யன் வாய்க்காலில் 85 கோடி இந்திய ரூபா மதிப்பீட்டில் கதவணைகள் அமைக்கப்படும். 

குறித்த கதவணைகள் அனைத்தும் பதினைந்து மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. முல்லை பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரால் கேரளாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

 நீர்மட்டத்தை குறைக்காததால் வெள்ளம் ஏற்படவில்லை. அங்குள்ள எண்பது அணைகளிலிருந்தும் அதிகளவிலான தண்ணீர் திறக்கப்பட்டதால் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முல்லைபெரியாற்றில் 142 அடி நீர் தேக்கக்கூடாது என்பதற்காக கேரளா தவறான குற்றச்சாட்டை கூறுகிறது.’ என்றார்.