முன்னாள் ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட நான்கு பேருக்கு விசேட மேல்நீதிமன்றம் பிணை வழங்கி விடுவித்துள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பான வழக்கு விசாரணை இன்று விசேட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விசேட மேல் நீதிமன்றத்தின் முதலாவது வழக்கை விசாரிப்பதற்கான முதல் ஆமர்வு இன்று இடம்பெற்றது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலக பிரதானியாகச் செயற்பட்ட காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து முன்னாள் ஜனாதிபதியின் பணிக்குழுவின் பிரதானி காமினி செனரத் விசேட மேல்நீதிமன்றில் இன்று ஆஜராகியிருந்தார். 

லிட்ரோ சமயல் எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பான வழக்கின் நிமித்தம் அவர் நீதிமன்றில்  ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

விசேட நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாத்தில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் அபேகோன் , சம்பத் விஜேரத்ன ஆகியோரும் சம்பா ஜனாகி ராஜரத்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்றது.

மோசடி மற்றும் நிதி குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்ட முதலாவது மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தின், முதலாவது வழக்கு விசாரணை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.