சிறைச்­சாலை கத­வு­க­ளுக்கு பின்னால் சொல்ல முடி­யாமல் மறைக்­கப்­பட்ட எத்­த­னையோ சோக கதைகள் இருந்­து­கொண்டே தான் இருக்­கின்­றன. வாழ்க்கைப் போராட்­டத்தின் மத்­தியில் கன­வுகள் அனைத்தும் சிதைந்த நிலையில், வழி தவறிச் சென்ற பலர் தமக்­கொரு விடிவு வராதா? என்ற ஏக்­கத்­துடன் காத்­தி­ருக்­கின்­றார்கள்.

அந்­த­வ­கையில் மெழு­கு­வர்த்­தியைப் போல் தன்னை உருக்கி தனது குடும்­பத்­தி­னரின் வாழ்வில் ஒளியூட்­டிய பிரி­யந்த (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது.) தனக்­கென்று ஒரு வாழ்வை அமைத்து கொள்ள நினைத்த போது அவ­னு­டைய எதிர்­பார்ப்­புக்கள் அனைத்தும் ஏமாற்­றங்­க­ளி­லேயே நிறை­வுற்­றன. இன்று காதல் தந்த வலி­க­ளையும், ஏமாற்­றங்­க­ளையும் சுமந்­த­வாறு தனது குடும்­பத்­தி­ன­ருடன் வாழும் எதிர்­பார்ப்பில் தனது விடு­தலை நாட்­களை எண்­ணிக்­கொண்­டி­ருக்­கின்றான் பிரி­யந்த.

பிரி­யந்த மனம் திறந்து தனது வாழ்க்கை அனு­ப­வங்­களை பகிர்ந்­து­கொண்ட போது,

எனது குடும்­பத்தில் நான் மூத்த பிள்ளை. எனக்கு மூன்று தங்­கைகள்.

தந்­தைக்கு நிரந்­த­ர­மான தொழி­லொன்று இருக்­க­வில்லை. ஆங்­காங்கே கிடைக்கும் கூலி வேலை­களைச் செய்து வந்தார். அம்மா பல வரு­டங்­க­ளாக நோய்­வாய்ப்­பட்டு படுக்­கை­யி­லேயே கிடந்தார். எனவே, அப்­பா­வுக்கு வீட்டு வேலைகள், அம்­மாவை பார்த்­துக்­கொள்­வது ,தங்­கை­களை பார்த்து கொள்­வது என்று நேரம் சரி­யா­கவி­ருந்­தது. கூலி வேலை­களைச் செய்து அப்பா சம்­பா­திக்கும் பணம் அம்­மாவின் வைத்­திய செல­வு­க­ளுக்கே போது­மா­ன­தா­க­வி­ருக்­க­வில்லை. இதனால் வீட்டில் வறுமை தலை­வி­ரித்­தா­டி­யது. இதை உணர்ந்த நான் 13 வய­தி­லி­ருந்தே வீடு வீடாகச் சென்று பழைய பத்­தி­ரி­கை­களை சேக­ரித்து எடுத்­து­வந்து அவற்றை, பழைய போத்தல், பத்­தி­ரி­கைகள் எடுக்கும் வியா­பா­ரி­க­ளிடம் விற்றுப் பணம் சம்­பா­தித்தேன். அந்தப் பணத்­தி­லேயே என் பாட­சாலை செல­வு­க­ளையும் பார்த்­துக்­கொண்டேன். இவ்­வாறு குடும்ப கஷ்­டத்­துக்கு மத்­தியில் கல்விப் பொதுத் தரா­தர சாதா­ர­ண­தர பரீட்சை எழு­தினேன். அதன்­பின்­னரும் எனது தொழிலைக் கைவி­டாது செய்து வந்தேன். இத­னி­டையே, அம்­மாவும் இறந்­து­விட்டார். அப்­போது தங்­கைகள் மூவரும் சிறி­ய­வர்கள். எனவே, அப்­பாவால் தனி­யாக குடும்­பத்தைக் கொண்டு நடாத்த முடி­யா­ததால் எனக்கு உயர்­த­ரத்தை (A/L) தொடரும் எதிர்­பார்ப்பு இருக்­க­வில்லை.

நானும் நிரந்­த­ர­மான தொழி­லொன்றை தேடிச்­சென்றேன். எனினும், என்­னிடம் பெரி­தாக தொழில் அனு­பவம் இல்­லாத கார­ணத்­தினால் எனக்கு யாரும் வேலை வழங்க தயா­ரா­க­வி­ருக்­க­வில்லை. நான் தொழில் தேடி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தேன். இறு­தியில் கராஜ் ஒன்­றி­லேயே எனக்கு வேலை கிடைத்­தது. அங்கு செய்யும் வேலைகள் என்­ன­வென்றும் எனக்கு தெரி­யாது. போன புதிதில் எனக்கு சற்று சிர­ம­மா­க­வி­ருந்­தது. எனினும், போகப் போக நான் அவற்றை பழ­கிக்­கொண்டேன். அதன்பின் கராஜ் வேலை­களின் மூலம் எனக்கு நல்ல வரு­மானம் கிடைத்­தது. எனவே, தந்­தையின் வரு­மா­னமும் எனது வரு­மா­னமும் குடும்­பத்தின் செல­வு­க­ளுக்கு போது­மா­ன­தா­க­வி­ருந்­தது. தங்­கை­களும் மிகுந்த திற­மை­யுடன் கல்வி நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டார்கள். என்­னு­டைய சகோ­த­ரி­களில் இருவர் உயர்­தர பரீட்­சையில் சிறந்த பெறு­பே­று­களைப் பெற்று பல்­க­லைக்­க­ழகம் சென்­றார்கள். கடைசி தங்­கைக்கு பல்­க­லைக்­க­ழகம் செல்லும் அள­வுக்கு பெறு­பே­றுகள் போதா­மையால் உயர் தர (A/L) பரீட்சை எழு­திய கையோடு வீட்­டி­லி­ருந்தார்.

நான் கராஜ் வேலை­களில் திற­மை­யுடன் ஈடு­பட்­டதால் எனது சம்­ப­ளமும் உயர்ந்­தது. இதனால், அப்பா வய­தா­னவர் என்­பதால் நான் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி, வீட்டில் இருக்க வைத்தேன். அவர் அடிக்­கடி உடல் உபா­தை­யொன்றின் கார­ண­மாக அர­சாங்க வைத்­தி­ய­சா­லையில் மருந்து எடுத்தும் வந்தார்.

விடு­முறை நாட்­களில் மட்­டுமே சகோ­த­ரிகள் இரு­வரும் பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து வீட்­டுக்கு வரு­வார்கள். ஏனைய நேரங்­களில் நானும் அப்­பாவும் கடைசி தங்கையும் வீட்­டி­லி­ருந்தோம். அம்மா இல்­லாத குறையை தவிர வேறு எந்தக் குறையும் எங்­க­ளுக்கு இருக்­க­வில்லை. நானும் எனது தங்­கை­களும் நண்­பர்­க­ளைப்­போ­லவே பழகி வந்தோம். தங்­கைகள் இரு­வரும் விடு­மு­றைக்கு வீட்­டுக்கு வரும் சந்­தர்ப்­பங்­களில் பல்­க­லைக்­க­ழ­கத்தில் நடக்கும் சுவ­ரா­ஷி­ய­மான சம்­ப­வங்­களை எங்­க­ளுடன் பகிர்ந்­து­கொள்­வார்கள்.

அன்­றைய நிலையில் நான் திரு­ம­ணத்தை பற்றி எல்லாம் பெரி­தாக சிந்­திக்­க­வில்லை. தங்­கைகள் மூவ­ருக்கும் சந்­தோ­ஷ­மான அழ­கான வாழ்க்­கை­யொன்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்­பது குறித்து மட்­டுமே நான் சதா சிந்­தித்தேன். அதற்­கேற்றாற் போல் எனது மூத்த சகோ­தரி பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து பட்டம் பெற்று வெளி­யே­றி­ய­வுடன் தனியார் நிறு­வ­ன­மொன்றில் வேலைக்கு சென்றாள். அதன்பின் அவள் காத­லித்த பைய­னுக்கே அவளை திரு­மணம் செய்து வைத்தேன். அதனை தொடர்ந்து எனது இரண்­டா­வது தங்­கைக்கும் நல்ல படித்த மாப்­பிள்­ளை­யொ­ரு­வரை பார்த்து திரு­மணம் செய்து வைத்தேன். அவர்கள் இரு­வரும் திரு­மணம் முடித்த கையோடு தனது புகுந்த வீட்டை நோக்­கிச்­செல்ல நானும் அப்­பாவும், கடைசி தங்­கையும் வீட்டில் இருந்தோம். தங்­கை­மார்­க­ளுக்கு திரு­மணம் முடிந்து ஒரிரு மாதங்­களில் நோய்­வாய்ப்­பட்­டி­ருந்த நிலையில் அப்பா இறந்­து­விட்டார்.

இறு­தி­யாக நானும், எனது கடைசி தங்­கை­யுமே வீட்டில் எஞ்­சி­யி­ருந்தோம். தங்­கை அழகுக் கலை டிப்­ளோமா ஒன்றை முடித்து மண­மகள் அலங்­கா­ரங்கள் என்­ப­வற்றை வீட்­டி­லி­ருந்து செய்து பணம் சம்­பா­தித்தாள். எனவே, நான் வேலைக்குச் சென்­ற­வுடன் தங்கை தனி­யாக வீட்­டி­லி­ருக்­கின்­றாளே என்ற கவலை எனக்கு இருக்­க­வில்லை. அவளின் வேலை­க­ளுக்கு உத­வி­யா­கவும், அவ­ளுக்குத் துணை­யா­கவும் அவ­ளு­டைய தோழிகள் பகல் வேளை­களில் வீட்­டி­லி­ருப்­பார்கள். நாள­டைவில் தங்­கையின் தோழி­களில் ஒரு­வ­ரான இந்­து­னியை (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது.) எனக்குப் பிடித்து போக நான் அவளை காத­லிக்க ஆரம்­பித்தேன். அவள் ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்தார். எனினும், முதலில் என் காதலை அவ­ளிடம் நான் வெளிப்­ப­டுத்­த­வில்லை. நேராக அவர்­களின் வீட்­டுக்கு சென்று அவளின் பெற்­றோ­ரிடம் முறைப்­படி பெண் கேட்டேன். அவளின் பெற்­றோரும் என்­னு­டைய விருப்­பத்­துக்கு எந்த மறுப்பும் தெரி­விக்­காமல் அவளை எனக்கு திரு­மணம் செய்து வைக்க சம்­ம­தித்­தனர். அது­மட்­டு­மின்றி, இந்­து­னிக்கும் என்னைப் பிடித்­து­போக அவளும் என்னை காத­லிக்க ஆரம்­பித்தாள்.

எனினும், எனது கடைசி தங்­கைக்கு திரு­மணம் முடிந்த பின்னர் நாங்கள் இரு­வரும் திரு­மணம் செய்­து­கொள்வோம் என்று முடி­வெ­டுத்தோம். அவள் எனக்கு இன்­னு­மொரு தாயைப் போலவே இருந்தாள். இத­னி­டையே, எனது கராஜ் உரி­மை­யாளர் திடீ­ரென்று சுக­வீ­ன­முற்று இறந்து விட்டார். அதன்­பின்னர் அவ­ருக்கு பிள்­ளைகள் யாரும் இல்­லாத கார­ணத்­தினால் கராஜை என்­னு­டைய பெயரில் அவர் எழுதி வைத்­தி­ருப்­பது எனக்கு தெரிந்­தது. முத­லா­ளியின் இறுதிக் கிரி­யைகள் நிறை­வ­டைந்த பின்னர், முத­லா­ளியின் மனைவி கராஜை என்­னிடம் ஒப்­ப­டைத்தார். அதன்­பின்னர் எனக்கு முத­லா­ளியின் மனை­வி­யையும் கடைசிக் காலத்தில் பார்த்­துக்­கொள்ள வேண்­டிய கட­மை­யி­ருந்­தது. ஆகவே, முத­லாளி என்­னிடம் ஒப்­ப­டைத்த கராஜை நான் நல்­ல­மு­றையில் செய்து வந்தேன். அதன்­மூலம் காணி­யொன்றை வாங்கி புதி­தாக வீடு ஒன்றைக் கட்ட ஆரம்­பித்தேன்.

எனது கடைசி தங்­கையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்­கடி முத­லா­ளி­யம்­மாவை சென்று பார்த்து வருவாள். இத­னி­டையே, தங்­கையும் ஒரு­வரை காத­லிக்க ஆரம்­பித்தாள். எனினும், அவ­னுக்கு நிரந்­த­ர­மான தொழி­லொன்று இல்­லாத கார­ணத்­தினால் எனக்கு ஆரம்­பத்தில் அவனை பிடிக்­க­வில்லை. எனினும், தங்­கையின் விருப்­பத்­துக்கு தடை­யாக இருக்கக் கூடாது என்ற கார­ணத்­தினால் என்ன செய்­வ­தென்று நானும் சம்­ம­தித்தேன்.

இது இவ்­வா­றி­ருக்க நான் திரு­மணம் முடிக்க இருந்த இந்­துனி வேலைக்குச் சென்று வீடு திரும்பும் வழியில் யாரோ அவளைக் கடத்­திச்­சென்று விட்­டார்கள். எனினும், அது தொடர்பில் நான் அறிந்­தி­ருக்­க­வில்லை. வெகு நேர­மா­கியும் அவள் வீட்­டுக்கு வராத கார­ணத்­தினால் அவ­ளு­டைய அப்பா என்னைத் தேடி வந்து விஷ­யத்தை சொல்லி அழைத்துச் சென்றார். நானும் அவரும் சேர்ந்து எல்லா இடங்­க­ளிலும் தேடினோம். எனினும், அவள் எங்­குமே இருக்­க­வில்லை.அன்­றி­ரவு நானும் தங்­கையும் அவளின் வீட்டில் தான் இருந்தோம்.

இறு­தியில் நள்­ளி­ரவு 12.00 மணி­ய­ளவில் முச்­சக்­கர வண்­டியில் வந்த இனம் தெரி­யாத நபர்கள் சிலர் அவளை வீட்டு வாசலில் போட்டு விட்டு, வந்த வேகத்தில் அங்­கி­ருந்து தப்பிச் சென்று விட்­டார்கள். அது­மட்­டு­மின்றி இந்­துனி அந்த காமு­கனின் காமப் பசிக்கு இரை­யாகி அலங்­கோ­ல­மான நிலையில் கிடந்தாள். அவளின் உடலில் உயிர் மட்­டுமே எஞ்­சி­யி­ருந்­தது. அவளால் முழு­மை­யாக எதையும் பேச முடி­ய­வில்லை. அவள் நிலை­கு­லைந்­த­வளாய் இருந்தாள். அவளை எண்ணி நான் உள்­ளுக்குள் புலம்­பினேன்.

எனவே, என்­னு­டைய இந்­து­னியை இந்த நிலைக்கு ஆளாக்­கி­ய­வர்­களை சட்டம் தண்­டிக்க முன்னர் நானே என்­னு­டைய கையால் பழி­தீர்க்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்­படி இது பற்றி பொலிஸ் நிலை­யத்தில் நாங்கள் முறைப்­பாடு செய்­ய­வில்லை. இரண்டு மூன்று நாட்­களின் பின்னர் இந்­துனி தன்னை இந்த நிலைக்கு ஆளாக்­கி­யது தன்­னு­டைய வீட்­டுக்கு பக்­கத்­தி­லி­ருக்கும் தினேஷ் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) தான் என்று கூறினாள். எனவே அந்தப் படு­பா­தகன் யார் என்­பதை அறிந்த நான் அவனை தேடிச் சென்று பழி­தீர்க்க முடி­வெ­டுத்தேன். அதன்­படி அவன் இருக்கும் இடத்தை அறிந்­து­கொண்டு அங்கு சென்று அவனை கத்­தியால் குத்தி கொலை செய்து விட்டு பொலிஸில் சர­ண­டைந்தேன்.

பொலி­ஸாரின் விசா­ர­ணையில் என்­னு­டைய குற்றம் நிரூ­பிக்­கப்­பட்­டதால் நான் சிறையில் அடைக்­கப்­பட்டேன். இந்தக் காலப்­ப­கு­தியில் என்­னு­ட­டைய தங்­கைகள் மூவரும் என்னை பார்க்க வரு­வார்கள். அவர்கள் என்னை நினைத்து சரி­யாக கவ­லைப்­ப­டு­வார்கள். பார்க்க வரும் ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் அழு­து­கொண்டு தான் இங்­கி­ருந்து செல்­வார்கள். நான் சிறைக்கு வந்து மூன்று மாதங்கள் நிறைவில் இந்­துனி ஒரு நாள் என்னைப் பார்க்க வந்தாள்.

அவள் என்­னிடம் நான் கர்ப்­ப­மா­க­வி­ருக்­கின்றேன் என்று கூறி அழுதாள். நான் அவ­ளிடம் உன்­னு­டைய குழந்­தைக்கு நான் அப்­பா­வா­கின்றேன். நீ தைரி­ய­மாக உன் குழந்­தையை பெற்­றெடு என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தேன். எனினும், அந்த முட்டாள் பெண் நான் கூறி­யதை கேட்­காமல் நஞ்­ச­ருந்தி தற்­கொலை செய்­து­கொண்டாள். அவ­ளு­டைய இறுதிக் கிரி­யை­க­ளுக்கு கூட என்னால் செல்ல முடி­யாமல் போனது. இந்­து­னியின் அன்பை மிஞ்சும் அள­வுக்கு என்னை யாரும் காத­லித்­த­தில்லை. அவள் கரம் பற்றும் நாளுக்­காக தான் ஒவ்வொரு நாளும் காத்திருந்தேன். எனினும் அவளுடன் வாழும் அதிஷ்டம் எனக்கு இறுதிவரை கிடைக்கவில்லை. என்னுடைய வேதனைகளை வெளியில் யாரிடமும் சொல்லி ஆறுதல் தேட முடியாமல் இந்த நான்கு சுவர்களுக்குள்ளேயே நான் அடைக்கப்பட்டு விட்டேன். இன்று இந்துனியின் நினைவுகள் மட்டுமே என் வாழ்க்கையென்று ஆகிவிட்டது.

இன்று என் தங்கைகள் மூவரும் நல்லதொரு இடத்தில் திருமணம் முடித்து சந்தோஷமாகவிருக்கின்றார்கள். சட்டத்தின் முன் நான் குற்றவாளியாகவிருந்தாலும் என்னை பொறுத்தவரை நான் செய்தது எனக்கு குற்றமாக தெரியவில்லை. என்னுடைய இந்துனிக்கு நடந்த அநியாயம் இன்னுமொரு பெண்ணுக்கு ஏற்படக்கூடாது என்று நினைத்து தான் நான் அவ்வாறு செய்தேன். எனது தண்டனை காலம் நிறைவுற்று இங்கிருந்து விடுதலையாகி என் தங்கைகளுடனும், அவர்களின் பிள்ளைகளுடனும் சேர்ந்து வாழும் எதிர்பார்ப்பிலேயே இன்று வரை காத்திருக்கின்றேன்.