Published by R. Kalaichelvan on 2018-08-24 09:36:55
வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆறு மாதகாலப் பகுதிக்குள் 30 ற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தின் பிரதிப் பொலிஸ் பொறுப்பதிகாரி குமாரசிங்க தெரிவித்தார்.

நேற்றையதினம் வவுனியா பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளில் ஸ்ரிக்கர் ஒட்டும் விழிப்புணர்வு நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த சில மாதங்களில் தற்கொலை செய்வது அதிகரித்து காணப்படுகின்றது. இந்த தற்கொலை செய்வதினை தடுத்து நிறுத்தும் முகமாகவே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கோடு 'மனிதனை நம்பாதே தற்கொலை செய்யாதே' என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை முச்சக்கரவண்டியில் ஒட்டியுள்ளோம் .
வவுனியா பிரதேசத்தில் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் 30ற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதில் அதிகளவானவர்கள் தூக்கில் தொங்கியே தற்கொலை செய்துள்ளனர்.
தற்கொலையினை தடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவே முச்சக்கரவண்டியில் ஆரம்ப கட்டமாக தற்கொலையினை தடுக்கும் விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டுகின்றோம் என தெரிவித்தார்.