கைபேசி இணைப்பு சிம் அட்டை விற்பனை செய்யும் இருவர், இளம் பெண்களுடன் சேட்டை விட்டதால், அவர்களை பெண் குரலில் கதைத்து அழைத்த இளைஞர்கள் சிலர் நையப்புடைத்து அனுப்பிவைத்தனர். அத்துடன், அவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளும் தீயிட்டு எரிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் நேற்றுமுந்தினம் புதன்கிழமை இரவு கொக்குவிலில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் சிம் அட்டைகள் விற்பனை செய்து கொண்டிருந்தோம். அங்கு வந்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று எம்மை வாள் முனையில் கடத்திச் சென்றது. கொக்குவில் கிழக்குப் பகுதிக்குக் கொண்டு சென்ற அந்தக் கும்பல் எம்மை வாள்களால் வெட்டிவிட்டு, எமது மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்து எரித்தது” என்று கைபேசி இணைப்பு சிம் அட்டை விற்பனை செய்யும் இளைஞர்கள் இருவரும் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவம் நேற்று முந்தினம் இரவு 7 மணிக்கு இடம்பெற்றது என்றும் அவர்கள் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் இருவரும் மானிப்பாயைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

“சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அவர்கள் இருவரும், இளம் பெண்களுக்கு விற்பனை செய்ய சிம் அட்டைகளுக்கு அழைப்பு எடுத்து தொந்தரவு வழங்குபவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

பெண் பிள்ளைகளுடன் சேட்டைவிட்ட காரணத்தால்தான், இளைஞர்கள் சிலர் அவர்கள் இருவரையும் கொக்குவில் கிழக்குப் பகுதிக்கு அழைத்து தாக்கியுள்ளனர். அவர்களுக்கு அழைப்பை எடுத்து பெண் குரலில் கதைத்துதான் கொக்குவில் கிழக்குக்கு அழைத்துள்ளனர். பின்னர் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளுக்கும் தீவைக்கப்பட்டுள்ளது.

தம்மை வெட்டினார்கள் என்று இளைஞர்கள் இருவரும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ள போதும், அவர்களுக்கு அடி காயங்களே உள்ளன. அத்துடன், கலட்டிச் சந்திப் பகுதியில் நேற்றுமுந்தினம் எவருமே சிம் அட்டை விற்பனை செய்யவில்லை எனவும் தெரியவந்தது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தன.

இதேவேளை, யாழ்ப்பாணம் நகர் முட்டாஸ் கடைச் சந்திப் பகுதியில் பூட்டுத் திருத்தும் கடையை நடத்துபவர் ஒருவரும் பெண்களுடன் சேட்டை விடுவதாகத் தெரிவித்து அண்மையில் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டார். அவரை பெண் ஒருவரை இரவு வேளை வீட்டு அனுப்பியே வெளியில் அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலுக்கு அமைப்பு ஒன்று பின்னர் உரிமை கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.