இந்தியாவின் பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான குல்தீப் நாயர் குறுகிய கால சுகவீனத்துக்குப் பிறகு இன்று வியாழக்கிழமை அதிகாலை புதுடில்லியில் தனியார் வைத்தியசாலையொன்றில் காலமானார்.அவருக்கு வயது 95.
பஞ்சாபியரான நாயர் 1923 ஆம் ஆண்டில் இப்போது பாகிஸ்தானின் பகுதியாக இருக்கும் பஞ்சாப் மாகாணத்தில் சியால்கோட் பகுதியில் பிறந்தார். இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் அவசரகாலநிலை பிரகடனத்தின்போது முதன் முதலாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர்களில் ஒருவரான நாயர் அரசின் மனித உரிமை மீறல்களை மிகவும் விரிவாக ஆவணப்படுத்தியவர்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதியான உறவுகள் இருக்கவேண்டும் என்பதில் ஆழமான அக்கறை கொண்டவரான அவர், தேசிய தினசரிகள் பலவற்றின் ஆசிரியர், 14 மொழிகளில் சுமார் 80 பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பத்தி எழுத்தாளர், பல்வேறு விவகாரங்களில் 15 க்கும் அதிகமான நால்களை எழுதியவர்,
பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் ஆலோசகர், ஐக்கிய இராச்சியத்துக்கான இந்தியத் தூதுவர், 1990 களின் பிற்பகுதியில் ராஜ்ய சபா உறுப்பினர்,அவசரகாலநிலை தொடக்கம் அயோத்தி பாபர் மசூதி உடைப்பு வரை அரசின் அத்துமீறல்களுக்கு எதிராக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளைத் தொடுப்பதில் முன்னணியில் நின்று செயற்பட்டவர் என்று பல்பரிமாண அருமைபெருமைகளைக் கொண்டவர்.
பிரிவினைக்கு முந்திய இந்தியாவின் கல்லூரியொன்றில் படித்தப் பட்டம் பெற்ற இந்தியர்களின் தலைமுறையைச் சேர்ந்தவர் நாயர்.மகாத்மா காந்தியைப் போன்று உபகண்டப் பிரிவினை ஒரு பெரும் தவறு என்று உறுதியாக நம்பியவர்.இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளைப் போன்றவை.தப்பபிப்பிராயங்களை மறந்து இணக்கபூர்வமான அயல்நாடுகளாக மாறாவிட்டால் இரு நாடுகளுமே அமைதியாக வாழமுடியாது என்று எப்போதுமே உறுதியாகக் கூறிவந்தவர்
நாயர்.2000 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் இந்தியாவினதும் பாகிஸ்தானினதும் சுதந்திர தினங்களின்போது ( ஆகஸ்ட் 14 - 15 ) பஞ்சாபின் அமிர்தசரஸ் நகருக்கு அண்மையாக இரு நாடுகளுக்கும் இடையிலான வகாஹ் எல்லை வரை சமாதான செயற்பாட்டாளர்களின் மெழுகுவர்த்தி ஊர்வலத்துக்கு நாயர் தலைமைதாங்கிச்சென்றார்.
பத்திரிகைச் சுதந்திரத்தையும் குடியியல் சுதந்திர உரிமைகளையும் பாதுகாப்பதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த நாயர் அரச அதிகாரத்தை எதிர்த்துநின்று நீதியை நிலைநாட்டுவதற்கு முன்னெடுத்த போராட்டங்கள் ஊடகத்துறை சார்ந்த சகலருக்கும் பெருமை தருவதாகும்.
' பியோன்ட் த லைன்ஸ் ' என்ற தனது சுயசரிதை நூலில் பாகிஸ்தானின் அணு விஞ்ஞானியான அப்துல் கதீர் கானுடனான தனது நேர்காணல் பற்றி எழுதியிருந்த நாயர் பாகிஸ்தான் அணுவாயுதத்தை கொண்டிருப்பதாக பொதுவாக தெரியவந்த காலகட்டத்துக்கு வெகு முன்னதாகவே அந்நாடு அந்த ஆயுதத்தை வைத்திருந்தது என்று அவர் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்திருக்கிறார்.
' பிற்றிவீன் தலைன்ஸ் ' என்ற தலைப்பிலான நாயரின் அரசியல் விவகார ஆய்வுப் பத்தி மிகவும் பிரபல்யம் வாய்ந்தது.இந்தியாவின் முக்கியமான அரசியல்வாதிகள், கல்விமான்கள், அறிவுஜீவிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மாத்திரமல்ல வெளிநாடுகளில் உள்ள பல்துறைசார்ந்தவர்களும் நாயரின் அந்தப் பத்தியை மிகுந்த ஆர்வத்துடன் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
பெரும்பாலும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் 15 க்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கும் நாயரின் அரசியல் ஆய்வுகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் 50 க்கும் அதிகமான பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுவந்தன. ஐந்து நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாகக்கூட ' பிற்றிவீன் த லைன்ஸ் ' பத்தியொன்றை அவர் எழுதியிருந்ததாக குடும்பத்தவர்கள் தெரிவித்தனர்.உருது மொழிப் பத்திரிகையொன்றில் முதன்முதலாக செய்தியாளராகச் சேர்ந்து தனது பத்திரிகைத்துறை வாழ்க்கையை ஆரம்பித்த நாயர் ஸ்ரேற்ஸ்மன் உட்பட இந்தியாவின் பிரபல ஆங்கிலப் பத்திரிகைகள் பலவற்றின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
இந்தியாவில் பத்திரிகையொன்றின் ஆசிரியராக உயர்வுபெற்ற முதல் செய்தி நிருபர் என்றால் அந்தப் பெருமை நாயருக்கே உரியது.
நிமோனியாவினால் பாதிக்கப்பட்ட நிலையில் ஐந்து நாட்களுக்கு முன்னர் புதுடில்லி எஸ்கோட்ஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாயர் வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் மரணமடைந்தார் என்று அவரின் மூத்த மகன் சுதீர் நாயர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.அவர் மனைவி பார்தியையும் இரு மகன்மாரையும் விட்டுச்செல்கிறார்.உலகப் புகழ்பெற்ற அந்த பத்திரிகைச் சுதந்திரப் போராளியின் பூதவுடல் வியாழனன்று பிற்பகல் 1 மணியளவில் டில்லி லோதி இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM