முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் விவசாயத்திற்கும், விளையாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அவரது தயாரிப்பில் உருவான முதல் படைப்பான கனா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிவகார்த்திகேயனின் எண்ணப்படி விவசாயத்தில் சாதனை புரிந்து தொடர்ந்து தொண்டாற்றி வரும் விதை நெல் வேலாயுதன் என்ற விவசாயியையும், இந்திய பெண்கள் துடுப்பாட்ட வீராங்கனையான ஸ்ருதி மந்தனாவையும் மேடையில் ஏற்றி கனா படத்தின் இசை வெளியிடப்பட்டது.

இந்த படத்திற்கு திபு நைனன் தோமஸ் இசையமைத்திருக்கிறார். பாடலாசிரியர், பாடகரான அருண்ராஜா காமராஜ் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். 

இதில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன், இளவரசு, ரமா, முனிஷ் காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பெண்களின் துடுப்பாட்டத்தை மையப்படுத்திய இந்த திரைக்கதையில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில்,‘ இந்த படத்தின் பணிகள் தொடங்கும் போது எம்மிடம் கிரிக்கெட் விளையாட தெரியுமா? என்று இயக்குநர் கேட்டார். எமக்கு தெரியாது என்ற பதிலளித்தேன். பிறகு ஒரு வாரம் கழித்து நானே நடிக்கவா.. என்று கேட்டேன். பிறகு தொடர்ச்சியாக மூன்று மாதம் கடுமையாக பயிற்சிப் பெற்று இந்த படத்தில் நடித்தேன். இது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது.’என்றார்.

சிவகார்த்திகேயனின் மகளான ஆராதனாவும் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலின் பல்லவியைப் பாடி பாடகியாக அறிமுகமாகியிருக்கிறார்.