சீனாவிடமிருந்து கடன்பெறுமாறு இலங்கைக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என  சீனாவிற்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

சீனாவின் குளோபல் டைம்ஸிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முதலீடுகளையும் கடன்களையும் சீனாவிடமிருந்து பெறுமாறு இலங்கைக்கு எந்த அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள தூதுவர் சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் அந்த நாட்டுடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைப்பை பேண விரும்புகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அபிவிருத்தி திட்டங்களிற்கான கடன்களை தான கோரியது என்பதை முக்கியமாக சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

கடன்களை பெற்றுக்கொள்ளுமாறு எங்களிற்கு எந்த அழுத்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான சீனாவின் நிதியுதவி கூட இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்தே கிடைத்தது என கருணாசேன கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணித்த நிறுவனங்களையோ அல்லது சீனாவையோ குறைசொல்வது தவறு  எனவும் தெரிவித்துள்ள தூதுவர் துறைமுகம் தொடர்பான தீர்மானத்தை இலங்கை அரசாங்கமே எடுத்ததது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் முடிவுகள் காரணமாக ஏதாவது பிழையேற்பட்டிருந்தால் அதற்கு இலங்கை அரசாங்கமே பொறுப்பு எனவும் சீனாவிற்கான தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் சீனாவின் அதிகரித்த பங்களிப்பை இலங்கை எதிர்பார்க்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.