வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயம் தொடர்பில் அந்தணர் ஒன்றியம் உள்ளிட்ட மாவட்ட இந்து சமய அமைப்புக்கள் ஆர்வம் காட்டாமை குறித்து மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதி சிவன் ஆலயத்தை தமிழ் மக்கள் குறிப்பாக இந்து மக்கள் கடந்த நான்கு தலைமை முறையாக வழிபட்டு வந்தனர். 

குறித்த நிலையில் தொல்பொருட் திணைக்களம் மக்களின் சுதந்திரமான வழிபாட்டுக்கு தடையை ஏற்படுத்தியுள்ளதுடன், புதிய நிர்மாண பணிகளுக்கும் தடை விதித்துள்ளது. இதனை கண்டித்து ஆலய நிர்வாக சபையின் ஏற்பாட்டில் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் மக்களை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்த வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் சார்பில் ஒரு அந்தணர் கூட குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என விசனம் வெளியிட்டுள்ள மக்கள் அந்தணர் ஒன்றியமும் அரசியல்வாதிகள் போல் அறிக்கைகளுடன் நின்று கொண்டு சமூகம் சார்ந்த தமது சமயத்தின் பிரச்சினைக்காக குரல் கொடுக்க தவறியுள்ளார்கள் என கவலை வெளியிட்டுள்ளனர். 

அத்துடன் வவுனியா மாவட்டத்தில் பல இந்து சமயம் சார்ந்த அமைப்புக்கள் இருந்தும் சைவமகா சபையினர் தவிர்ந்த வேறு எந்தவொரு இந்து அமைப்புக்களும் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ள மக்கள், ஆதி சிவன் ஆலயத்தின் இருப்பு குறித்து அவர்கள் கொண்டுள்ள அசமந்தம் குறித்தும் கவலை வெளியிட்டுள்ளனர்.