ரயில் மற்றும் பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தின்போது பொதுமக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது முச்சக்கரவண்டி சாரதிகள் தான் என  ஒன்றிணைந்த முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் தலைவர் எம்.ஏ.திஸாநாயக்க  தெரிவித்தார்.

 சங்கத்தின் தலைவர் எம்.ஏ.திஸாநாயக்க தெரிவிக்கையில்,

ரயில் மற்றும் பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தங்களின் போது பொதுமக்களுக்கு பயண வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க முச்சக்கரவண்டி சாரதிகள் ஒருபோதும் பின்நின்றதில்லை. இவ்வாறான வேலை நிறுத்தங்களின்போது பிரயாணத்துக்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. 

ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தத்தின் காரணமாக உயர்தர பரீட்சையில் தோற்றவிருந்த மாணவர்கள் அதிகளவில் முச்சக்கரவண்டிகளிலேயே பயணித்து பரீட்சை நிலையத்திற்கு நேரகாலத்துக்கு சென்றுள்ளனர்.  குநை்த விலையில் பயணத்தை மேற்கொள்ள அவர்கள் சிறந்த தேர்வாக முச்சக்கரவண்டிகளையே நாடுகின்றனர். என்றார்.

இதேவேளை உயர்ததர பரீட்சையில் தோற்றவிருந்த மாணவர்களை முச்சக்கரவண்டிகளில் ஏற்றிச்சென்றதாக பதுளை மற்றும் பண்டாரவளை முச்சக்கரவண்டி சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பில் பண்டாரவளை நகரத்தில் முச்சக்கரவண்டி நிறுத்தத்திலுள்ள சாரதியான ராமலிங்கம் சுப்பையா தெரிவிக்கையில்,

நாங்கள் இந்த முச்சக்கரவண்டி நிறுத்தத்தில் வாடகைக்கு முச்சக்கரவண்டி செலுத்துகின்றோம். பஸ் மற்றும் ரயிலில் பயணம் செய்யும் மாணவர்கள் சில சமயங்களில் முச்சக்கரவண்டியில் பயணிப்பார்கள். 

ஆனால் அண்மையில் இடம்பெற்ற ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தத்தினால் வழமைக்கு மாறாக பல மாணவர்கள் முச்சக்கரவண்டியிலும் பஸ்ஸிலும் பரீட்சை மண்டபங்களுக்கு சென்றனர். 

இதேவேளை சரியான நேரத்துக்கு பஸ் வராத காரணத்தினாலும் பரீட்சை மண்டபத்துக்கு உரிய நேரத்திற்கு செல்லவேண்டும் என்பதினாலும் அதிகளவு மாணவர்கள் முச்சக்கரவண்டியிலேயே பயணித்தனர். 

எமக்கும் அது சாதனமாகப்போய்விட்டது. அப்போது எம்மால் அதிகளவு கட்டணத்தை மாணவர்கள் மீது விதித்திருக்க முடியும். ஆனால் நாம் அவ்வாறு செய்யவில்லை. சில சமயங்களில் வழமையாக விதிக்கப்படும் கட்டணங்களை விட குறைந்த கட்டணங்களே மாணவர்களிடமிருந்து பெற்றோம். நாமும் அவர்களிடம் நியாயமாக நடந்துகொண்டோம் என்றார்.

இதேவேளை இம்முறை உயர்தர பரீட்சையில் தோற்றிய சுரேஷ் மதிவாணன் தெரிவிக்கையில்,

நாங்கள் தினமும் பாடசாலைக்கு ரயிலில் மூலமே வருவோம். உயர்தர பரீட்சை மண்டபத்துக்கும் அவ்வாறே வந்தோம். ஆனால் திடீரென்று ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தத்தினால் எம்மால் எப்படி பரீட்சை மண்டபத்துக்கு வருவது என்று தெரியவில்லை. 

அப்போது என்னுடைய அப்பா அவருக்கு தெரிந்த  முச்சக்கரவண்டியில் பரீட்சை மண்டபம் செல்ல வழிவகை செய்தார். நானும் என்னுடைய நண்பர்கள் உள்ளிட்ட மூவரும் குறித்த முச்சக்கரவண்டியிலேயே பரீட்சை மண்டபத்துக்கு சென்றோம். பரீட்சை முடிந்த முச்சக்கரவண்டி சாரதி எங்களுக்காக காத்திருப்பார். அவர்தான் மீண்டும் எங்களை வீடுகளுக்கு அழைத்துச்சென்றார் என குறிப்பிட்டார்.