பிராந்திய, சர்வதேச போட்டித்தளமாக இலங்கை இருக்க வேண்டியதில்லை - லூ ஷொங்

21 Aug, 2018 | 04:49 PM
image

முதல் பகுதி இராணுவ நடவடிக்கைகளுக்கு அம்பாந்தோட்டையை பயன்படுத்த மாட்டோம்

இலங்கை சர்வதேசத்தின் எந்தவிதமான தலையீடுகளுமின்றி உள்நாட்டு விவகாரங்களுக்கு உள்ளக ரீதியாகவே தீர்வுகளை அடைந்து நல்லிணக்கத்தினை ஏற்படுத்த வேண்டும். ஒரே மண்டலம் - ஒரே பாதை திட்டம் குறித்து இந்தியாவுக்கு கவலைகள் இருந்தாலும் அது ஒருபோதும் நிறுத்தப்பட மாட்டாது என என இலங்கைக்கான மக்கள் சீனக்குடியரசு தூதரகத்தின் அரசியல் பிரிவுக்கான தலைவர் லூ ஷொங் தெரிவித்தார்.

அவர் வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வி வருமாறு,

கேள்வி:- வடக்கில் 45ஆயிரம் வீட்டுத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு சீன நிறுவனம் எடுத்த முயற்சிகள் என்னவாயிற்று?

பதில்:- அந்த வீட்டுத்திட்டத்தினை முன்னெடுப்பதில் சீன நிறுவனத்துக்கு எவ்விதமான இடர்பாடுகளும் இல்லை. வடக்கில் உள்ள சில அரசியல் கட்சிகள் மற்றும் வெளிதரப்பினரின் எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளன. இதனால் அந்த விடயம் சவாலுக்குள்ளாகியுள்ளது. சிறந்த தரமானதும், குறைந்த செலவுடையதுமான இந்த வீட்டுத்திட்டம் தொடர்பில் அரசாங்கமும், வடமாகாண சபையும் தீர்மானத்தினை எடுப்பார்கள் என்று கருதுகின்றேன். நான் விடுமுறைக்கு செல்வதற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தரப்பினரும் சிறந்த திட்டம் என்று நம்பிக்கை வெளியிட்டிருந்தனர். விடுமுறையிலிருந்து திரும்பி ஒருசில தினங்களே ஆகின்ற நிலையில் தற்போதைய நிலைமை தொடர்பில் மீளாய்வு செய்யவேண்டியுள்ளது. எவ்வாறாயினும் அத்திட்டம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் ஏதும் இதுவரையில் கிடைக்கவில்லை. வடக்கின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் மீள்கட்டுமான செயற்பாடுகளில் இத்திட்டம் உட்பட பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்கி சிறந்த பங்களிப்பினை ஆற்றுவதற்கு இதய சுத்தியுடன் எதிர்பார்த்துள்ளோம்.

கேள்வி:- இந்த வீட்டுத்திட்டத்தினை முன்னெடுப்பதில் இழுபறிகள் ஏற்படுவதற்கு இராஜதந்திர ரீதியான சிக்கல்களே காரணமாகவுள்ளதாக கூறப்படுகின்றதே?

பதில்:- நானும் ஊடகங்கள் வாயிலான இத்திட்டத்திற்கு சவால்கள் காணப்படுகின்றன என்ற தகவல்களை அறிந்தேன். இது மக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான உதவித்திட்டமே தவிர வேறெந்த உணர்வுபூர்வமான விடயங்களையும் கொண்டிருக்கவில்லை.

கேள்வி:- இலங்கையில் சீனா ஆழமாக கால்பதிக்க முயற்சிகளை எடுத்து வருவதானது அயல் நாடான இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றதே?

பதில்:- இந்த விதமான அபிப்பிராயம் இந்திய அரசாங்கத்திலிருந்து வரவில்லையே.

கேள்வி:- இல்லை இந்தியாவின் பல்வேறுபட்ட தரப்புக்கள் இத்தகைய கருத்துக்களை வெளியிட்டுள்ளன. குறிப்பாக தென்னிந்தியாவிலேயே அதிகளவான இராணுவத்தளவாடங்கள், முகாம்கள் காணப்படுவதால் இலங்கையில் சீனாவின் பிரவேசம் அத்தகைய நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாகவே குறிப்பிடப்படுகின்றது?

பதில்:- மக்கள் சீனக் குடியரசின் வெளிவிவகார தலைமையகத்தில் இந்திய பகுதியில் கடந்த எட்டுவருடங்களாக பணியாற்றிய அனுபவம் எனக்குள்ளது. இதன்போது இந்தியாவின் அனைத்து பாகங்களைச் சேர்ந்த பல்வேறு தரப்புக்களுடன் பரஸ்பர கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருக்கின்றேன். அச்சமயங்ககளில் கூட நீங்கள் குறிப்பிட்ட போன்றதொரு அபிப்பிராயம் முன்வைக்கப்படவில்லை. மக்கள் சீனக்குடியரசு மற்றும், இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் பரஸ்பர நம்பிக்கை வலுவாக உள்ளது.

அவ்வாறிருக்கையில் ஒரு சில நபர்கள் அல்லது குழுவினர் அல்லது நிறுவனங்கள் தான் இவ்வாறான அபிப்பிராயங்களை பிரசாரம் செய்கின்றன. இத்தகைய பிரசாரம் செய்யப்படும் தரப்புக்களிடத்தில் புராதன பனிப்போர் சிந்தனைகளும், அடிப்படையற்ற கொள்கைகளுமே மையமாக இருக்கின்றன. இந்து மா சமுத்திரம் மிகப் பரந்துபட்டதாகவும் திறந்ததாகவும் இருக்கின்றது. அதில் கேந்திர ஸ்தானத்திலேயே இலங்கை காணப்படுகின்றது. ஆகவே இலங்கையானது தனியே சீனாவுடனோ அல்லது இந்தியாவுடனோ மட்டுமன்றி இந்து மா சமுத்திர பிராந்தியத்திலுள்ள நாடுகள் உள்ளடங்களாக அனைத்து சர்வதேச நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளை பேணவேண்டியுள்ளது. அதுவே போரின் பின்னரான இலங்கையின் மீள்கட்டுமானத்திற்கு வழிவகுப்பதாக இருக்கும்.

மேலும் மக்கள் சீனக் குடியரசுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போட்டித்தன்மை இல்லை மாறாக இருதரப்பு ஒத்துழைப்பு காணப்படுகின்றது. பிராந்திய அல்லது சர்வதேச நாடுகளின் அதிகாரபோட்டித்தளமாக இலங்கை இருக்க வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம். இலங்கையில் அனைத்து தரப்புக்களும் ஒருமித்த ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகின்றது.

கேள்வி:- ஒரே மண்டலம் - ஒரே பாதை திட்டம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கின்றது?

பதில்:- இந்தியா சில வழிகளில் ஈடுபாட்டினைக் கொண்டிருப்பதாக நான் கருதுகின்றேன்.

கேள்வி:- ஒரே மண்டலம் - ஒரே பாதை திட்டமானது இந்தியாவின் “இறைமை”க்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக இருக்கின்றது என இறுதிதருணத்தில் அந்நாட்டினால் குறிப்பிட்டதாக அறியக்கிடைக்கையில் உத்தியோக பூர்வ அறிவிப்புக்கள் ஏதும் உள்ளனவா?

பதில்:- இந்த திட்டம் தொடர்பாக இந்தியாவுக்கும் சில விதமான கவலைகள் இல்லாமல் இல்லை. ஆனாலும் ஒரே மண்டலம் - ஒரே பாதை திட்டம் ஒருபோதும் நிறுத்தப்பட மாட்டாது. இந்த திட்டத்தின் முன்முயற்சிகள் உத்வேகத்துடன் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் கவலைகள் தீர்க்கப்படுகின்றபோது அவர்களும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எமக்கு உள்ளது. இந்த திட்டத்தில் அவர்கள் பங்கேற்க வேண்டுமென வரவேற்கின்றேன்.

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி கட்டமைப்பில் இந்தியா மிக முக்கியமான வகிபாகத்தினைக் கொண்டிருக்கின்றது. அந்த வங்கியில் இரண்டாவது முதலீட்டாளராக இந்தியா காணப்படுவதோடு சிரேஷ் முகாமையாளர் கூட இந்தியாவைச் சேர்ந்தவராகவே உள்ளார். இந்த வங்கியின் செயற்பாட்டுத்திடங்களுக்கு இந்தியா தனது ஒத்துழைப்பினை முழுமையாக வழங்குகின்றது. அதேநேரம் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியானது ஒரே மண்டலம் - ஒரே பாதை திட்டத்தின் முன்முயற்சிகளுக்கு மிக முக்கியமான பங்களிப்பினை வழங்குகின்றது.

இந்திய அரசாங்கம் மேற்படி திட்டத்தினை ஏற்றுக்கொள்ளாது இருக்கலாம். ஆனால் பிராந்திய அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டில் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் மிகச்சிறந்த கூட்டுறவு காணப்படுகின்றது. மேலும் சில நிறுவனங்கள் சீனா இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதையிட்டு கவலைகளைக் கொண்டிருக்கின்றன. அவர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு நாம் தடையாக இருக்கமாட்டோம். எம்முடன் கூட்டிணைந்தோ அல்லது பிரத்தியேகமாகவோ அவர்கள் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென நாமும் கோருவதுடன் அவர்களை இலங்கைக்கு வருகவென வரவேற்கின்றோம்.

விசேடமாக போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் அவர்கள் முதலீடுகளை செய்யுமாறும் கோருகின்றோம்.

கேள்வி:- “அனைத்து பிரஜைகளும் சமமானவர்கள்” என்ற கோட்பாட்டினை இறுக்கமாகக் கொண்டிருக்கும் மக்கள் சீனக்குடியரசு இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எவ்விதமான கருதுநிலையை கொண்டிருக்கின்றது?

பதில்:- நீங்கள் குறிப்பிட்டதன் பிரகாரம் தான் எமது நாட்டின் கோட்பாடு இருக்கின்றது என்பதை முதலில் ஏற்றுக்கொள்கின்றேன். இலங்கையின் தேசிய பிரச்சினை என்பது உள்நாட்டு விவகாரமாகும். அவ்வாறிருக்கையில், மக்கள் சீனக் குடியரசை முன்னுதாரணமாக கொள்வோமாக இருந்தால், அங்கு 56இனக்குழுக்கள் காணப்படுகின்றன. ஹான் இனத்தினரே பெரும்பான்மையாக இருக்கின்றனர். ஏனைய 55இனக்குழுக்களும் சிறுபான்மைகளாகவே இருக்கின்றன. ஆனாலும் அனைத்து இனங்களுக்கிடையிலும் நல்லிணக்கம் காணப்படுகின்றது. ஒவ்வொரு மாகணங்களுக்கும் ஆளுநர்கள் இருக்கின்றார்கள் பெய் ஜிங்கிலிருந்து மாநிலங்களின் தலைவர்கள் செயற்படுகின்றார்கள். மத்திய அரசாங்கமானது சிறுபான்மையினர் வாழும் பகுதிகளிலும் பின்தங்கிய பகுதிகளிலும் பெருந்தொகையான முதலீடுகளை செய்கின்றது. குறிப்பாக திபெத், ஷின்ஜாங், கன்சூ போன்ற இடங்களில் அத்தகைய முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்மூலம் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, நல்லிணக்கம், சமத்துவம் அனைத்துமே மேம்பாடடைகின்றது.

மக்கள் சீனக் குடியரசைப் பெறுத்தவரையில் உள்ளக விவகாரங்களில் சர்வதேச நாடுகளோ அல்லது ஊடகங்களோ, தலையீடு செய்வதற்கோ அல்லது விமர்சிப்பதற்கோ இடமளிப்பதில்லை. எமது உள்ளக விவகாரங்கள் அனைத்தையும் நாமே கையாளுகின்றோம். அதுவே எமது கொள்கையாக இருக்கின்றது. அந்தவகையில் பல்லினங்களைக் கொண்டிருக்கும் இலங்கையும் சர்வதேசத்தின் எந்தவிதமான தலையீடுகளுமின்றி உள்நாட்டு விவகாரங்களுக்கு உள்ளக ரீதியாகவே தீர்வுகளை அடைந்து நல்லிணக்கத்தினை ஏற்படுத்த வேண்டும். நட்பு நாடு என்ற வகையில் அதற்கான முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்புக்களையும் சீனா என்றும் வழங்கும்.

கேள்வி;- இலங்கையில் நல்லிணக்கத்தினைக் கட்டியெழுப்புதற்கு சீனா எத்தகைய பங்களிப்பினை எதிர்காலத்தில் செய்யவுள்ளது?

பதில்:- கடந்த காலங்களில் இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு பாகங்களில் தான் அதிகளவான பங்களிப்பினை வழங்கியுள்ளது. போர்க்காலச் சூழல் காரணமாக வடக்கு கிழக்கில் போதியளவிலான செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கவில்லை. அங்கு வாழும் இனக்குழுக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணம் தொடர்பாக அதிகளவு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்பிரகாரமே வீட்டுத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கான முயற்சியினை சீன நிறுவனம் கவனத்தில் கொண்டுள்ளது.

கேள்வி:- உட்கட்டமைப்பு, பொருளாதார மேம்பாடுகள் ஊடாக நல்லிணக்கத்தினை ஏற்படுத்தமுடியுமா?

பதில்:- போரின் பின்னரான சூழலில் வடக்கிற்கான நெடுஞ்சாலையை(ஏ9) புணரமைப்பதில் சீன நிறுவனம் பங்களிப்பினைச் செய்திருந்தது. தற்போது அந்த நெடுஞ்சாலையின் முக்கியத்துவத்தினையும் பயன்பாட்டினையும் அனைவரும் அறிவார்கள். இது வடக்கின் மேம்பாட்டில் எவ்வளவு தூரம் செல்வாக்கு செலுத்துகின்றது. இணைப்பு மிகவும் சிறப்பாக இருக்கின்றபோது நல்லிணக்கம் விரைவாக ஏற்படுத்தப்படும். அதன் பிரகாரம் தற்போது வடக்கிற்கும் தெற்கிற்குமான இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது பிரதேசங்களை இணைப்பதைக் கடந்து இதயங்களையும் இணைக்கின்றது. அத்துடன் வடக்கில் உட்கட்டமைப்பு மேம்பாடுகளும் விரைவாக செய்யப்பட வேண்டியுள்ளது.

தமிழ் மக்கள் தெற்கிற்கும், சிங்கள மக்கள் வடக்கிற்கும் செல்லவேண்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும். மக்களுக்கிடையிலான தொடர்பாடல் ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்துப்பகுதிகளிலும் தொழில்வாய்ப்புக்களைப் பெற்று நல்ல வருமானங்களுடன் வாழவேண்டும். இவ்வாறான நிலைமை நல்லிணக்கத்தினை உறுதியாக ஏற்படுத்தும். எமது நாட்டில் கூட இந்தக் கருத்தியலின் பிரகாரம் தான் நாடளாவிய ரீதியில் புகையிர மற்றும் நெடுஞ்சாலைகள் ஊடாக இணைப்புக்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

உட்கட்டமைப்பு மேம்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் அனைத்து சீனப்பிரஜைகளும் நன்மை அடைகின்றார்கள். இது மக்கள் சீனக் குடியரசுக்கு மிக முக்கியமானதொரு விடயமாக உள்ளது.

கேள்வி:- சீனாவுடன், ஆட்சிப்பீடத்தில் உள்ள அரசாங்கமும், கடந்த கால அரசாங்கமும் கொண்டிருக்கும் உறவுகளில் வேறுபாடுகளை உணர்கின்றீர்களா?

பதில்:- இரண்டு அரசாங்கங்களுடனும் மிகச்சிறந்த உறவுகளையே கொண்டிருக்கின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியாக இருக்கலாம் அல்லது ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்கலாம் அல்லது வேறெந்த தரப்பினராகவும் இருக்கலாம் எமது நட்புறவு என்றும் அதியுயர்ந்ததாகவே இருக்கும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கூட்டு எதிர்க்கட்சியினர், முப்படைகளின் தளபதிகள், இராஜதந்திரிகள் என அனைத்து தரப்பினருடனும் நாம் சிறந்த மகிழ்ச்சியான உறவுகளையே கொண்டிருக்கின்றோம். சுPனா - இலங்கை நட்புறவுக்கும் இத்தரப்புக்கள் தமது முழுமையான ஆதரவினையும் நல்குகின்றன.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான கூட்டுறவும் ஒத்துழைப்பும் வலுவானதாக தொடர்ந்துகொண்டிருக்கும். எந்தவொரு தரப்புக்களையும் சார்ந்ததாக அமையாது. அதேபோன்றே எமது அபிவிருத்திச் செயற்பாடுகளும் எந்தவொரு இனத்தினையும் மட்டும் மையப்படுத்தியதாக அமையாது. இலங்கையின் உள்ளகவிவகாரங்கள் தொடர்பாக எமக்கு எவ்விதமான ஆட்சேபனையும் கிடையாது.

( நேர்காணல் ஆர்.ராம் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு...

2025-03-23 17:50:25
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56
news-image

இதுவா சமத்துவ நிலை?

2025-03-23 13:06:07
news-image

பொன்சேகாவை அரவணைப்பாரா அநுர?

2025-03-23 12:42:43